5568. ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்
அகங்காரப் பேய்பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்
கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோ
கூற்றுதைத்த சேவடியைப் போற்றவிரும் பீரே
வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்
வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்
சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்ற
தருணம்இது சத்தியஞ்சிற் சத்தியைச்சார் வதற்கே.
உரை: ஆற்றில் வெள்ளம் பெருகி வரும் முன்பே அணை செய்து காத்துக்கொள்ள நினையாத உலக மக்களே! அகங்காரமாகிய பேய்பிடித்தலைந்து வருந்துகிறீர்கள்; நாளை எமன் வருவானாயின் என்ன செய்வீர்கள்; அந்தோ! அந்த எமனை உதைத்து நீக்கிய சிவனுடைய சிவந்த திருவடியைப் போற்றி வழிபட விரும்புகின்றீர்கள் இல்லை; வேறாயவற்றைப் பேசித் தீவினைகளை மிகுவித்து மெலிகின்றீர்கள்; வீணான உலகியலில் கொடுமை நிறைந்த பொய் வழக்கங்களைக் கைவிட்டு எம்பால் வந்து அடைவீர்களாக; நான் உரைக்கின்ற சொற்களை ஏற்றருளுதற்கு என்னுடைய ஒப்பற்ற தந்தையாகிய சிவபெருமான் வந்தருளும் சமயம் இதுவாதலால் நீவிர் அவனது ஞான சத்தியைப் பெறுதற்கு உடனே வருவீர்களாக; நான் சொல்லும் இது சத்திய வாக்காகும். எ.று.
வள்ளலார் சொல்லுகின்றவற்றைக் கேளாது அசட்டை செய்து ஒழுகுகின்றமை புலப்பட, “அகங்காரப் பேய் பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்” என்று கூறுகின்றார். கூற்று - உயிர் கவரும் எமன். மார்க்கண்டனது உயிரைக் கவர வந்த எமனைக் காலால் உதைத்து விலக்கிய சிவனுடைய அருட் செயலை விதந்து, “கூற்றுதைத்த சேவடியைப் போற்ற விரும்பீர்” என்று புகல்கின்றார். வேற்றுரைத்தல் - அருள் நெறிக்கு வேறாகியவற்றை விளம்புதல். அது தீய வினையாதலால், “வினை பெருக்கி மெலிகின்ற உலகீர்” என்று கூறுகின்றார். உலகியலில் காணப்படுகின்ற தீய வழக்கங்கள் துன்பம் விளைவிப்பனவாதலால் அவற்றைக் கைவிடுதல் வேண்டி, “வீண் உலக கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்” என மொழிகின்றார். சாற்று - சொல்வது. சிற்சத்தி - திருவருள் ஞானத்தால் விளையும் மெய்ம்மையான ஆற்றல். இதனால் சன்மார்க்க நன்னெறிக்கு வேறாகியவற்றைப் பேசி உலகக் கொடுவழக்கங்களைக் கைவிடுமாறு வேண்டுகின்றார் என்பதாம். (3)
|