5572.

     நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே
          நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்
     வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்
          வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்
     புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தே
          புத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவே
     உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்
          உற்றதிவண் உற்றிடுவீர் உண்மை உரைத் தேனே.

உரை:

     நானிலத்து மக்களே! மயிர் நரைத்தலும் மூப்படைதலும் சாதலுமில்லாத நல்ல உடம்பை உடையவரே நற்குலத்தார் என்று அறிகின்றீர்கள் இல்லை; உங்களைப் பொறுத்தவரையில் நீங்கள் உயர் குலம் என்றும் தாழ்ந்த குலம் என்றும் வகுத்துக் கொள்கின்றீர்கள்; ஆனால் அந்த இரண்டு குலமும் மாண்டு மடிந்து போவதையும் காண்கின்றீர்கள்; குற்றம் பொருந்திய உங்கள் குல வகைகள் எல்லாம் புழுக் குலம் போலக் கெடுவன என்றறிந்து புதிய அருளமுதத்தை உண்டு உயர்வு பெறும் புனித குலத்தை அடைய வேண்டும்; அதனை அடைதற்கு உரைத்தருளும் என்னுடைய ஒப்பற்ற தந்தையாகிய சிவபெருமான் நம்பால் வந்தடையும் தருணம் எய்திவிட்டது; ஆதலால் உடனே வருவீர்களாக; உங்கட்கு உண்மையை உரைக்கின்றேன். எ.று.

     நானிலம் என்பது பாலை ஒழிந்த நால்வகை நிலங்களை யுடைய உலகத்தைக் குறிக்கின்றது. அதனால் உலகத்திலுள்ள மக்களை “நானிலத்தீர்” என்று கூறுகின்றார். உலகில் நரை திரை மூப்பு மரணம் என்ற குற்றங்களுக்கு இடமாகாத உடம்பை உடையவர்களே நற்குலத்தார் என்று அறிய வேண்டும்; ஆனால் நீவிர் அறிவதில்லை என்பாராய், “நற்குலத்தார் என அறியீர்” என்று நவில்கின்றார். உலகத்தார் குறிக்கும் உயர்குலம் தாழ்குலம் என்ற இரண்டும் நிலையில்லாதவை என்பாராய், “இரு குலமும் மாண்டிடக் காண்கின்றீர்” என்று உரைக்கின்றார். மக்கள் வகுக்கின்ற குல வகைகள் புழுக் கூட்டம் போல அழிவன என்று அறிய வேண்டும் என்பாராய், “நும் குலங்கள் எலாம் புழுக் குலம் என்றறிந்து நீங்குதல் வேண்டும்” என்று பழிக்கின்றார். நிலைத்த குலமாவது புனித குலம். மற்றவை குற்றம் பொருந்தியன எனக் குறித்தற்கு, “புரையுறும் நும் குலங்கள்” என்று புகல்கின்றார். புரை - குற்றம். புனித குலம் - தூய நற்குலம். அதனைப் பெறுவதே சிறப்பு; அதற்காக நீங்கள் திருவருள் அமுதத்தை உண்டு உயர்தல் வேண்டும் என வற்புறுத்துகின்றாராதலால் புனித குலத்தை, “புத்தமுதம் உண்டோங்கும் புனித குலம்” என்று போற்றுகின்றார். உரை பெறும் தனித் தந்தை - உரைத்தருளும் ஒப்பற்ற தந்தையாகிய சிவன்.

     (7)