5574. வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது
வாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்
மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்த
வாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே
மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனது
மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே
செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலே
சித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே.
உரை: மண்ணுலக மக்களே, வானவர்களே, ஏனைய உலகத்தவர்களே! உங்களுடைய வாழ்வெல்லாம் சிறந்த வாழ்க்கை என எண்ணி அறிவு மயங்க வேண்டாம்; குற்றம் பொருந்திய மரண நோய் இல்லாத வாழ்க்கையே வாழ்வாம் என எண்ணி அதனைப் பெறும் பொருட்டு மனத்தின்கண் உண்மை விருப்பமுற்று என்பால் வருவீர்களாக; எனக்கு மெய்ப்பொருளாகிய ஒப்பற்ற தந்தையாகிய சிவபெருமான் இச்சமயத்தில் நல்ல பல வயல்களுக்கு இடையே விளங்குகின்ற வடலூர் என்னும் ஞானசித்தி புரத்தில் எழுந்தருளி ஞானத் திருக்கூத்தைச் செய்தருளுகின்றார்; சென்று காண்மின். எ.று.
வையகம் - மண்ணுலகம். வானகம் - தேவருலகம். மதித்தல் - எண்ணி மகிழ்தல். மையகத்தே உறும் மரண வாதனை - குற்றத்தை தன்னிடத்தே உடைய மரண துன்பம். மரண காலத்தில் அறிவு கெட்டு எல்லாம் இருளாய்விடுதலின், “மையகத்தே உறும் மரண வாதனை” என்று விளக்குகின்றார். அகத்தே உண்மை விருப்புடன் வருவீர்களாக என்பாராய், “மெய்யகத்தே விரும்பி இங்கே வந்திடுமின்” என்று கூறுகின்றார். வடலூரின் கண் ஞான சபை இருக்குமிடம் ஞான சித்தி புரம் என்பது பற்றி, “ஞான சித்தி புரம் தனிலே சித்தாடல் புரிகின்றார்” என்று செப்புகின்றார். சித்தாடல் - ஞானக் கூத்தாடுதல். (9)
|