134. மரணமிலாப் பெருவாழ்வு
அஃதாவது, மரண பயமில்லாத இன்ப வாழ்வைக் குறித்துப் பாடுவது என்பதாம். மரணம் என்பது சாதல். ஒருவருடைய வாழ்வில் அஃது எப்போது வரும் என்பது தெரியாமையால் நல்ல இனிய காரியங்களைச் செய்வதற்குச் சிந்தனையாளர்களை அவலமுறச் செய்வது இதற்கு இயல்பு. இத்தகைய குறையை உடையதனால் பெரியோர் தமது பெருவாழ்வு சிதறிப் போவது கருதி இஃது இல்லாத வாழ்வே பெருவாழ்வு என்று கூறுகின்றனர். மரண பயம் இல்லாத வாழ்வு திருவருள் ஞான ஒழுக்கங்களை மேற்கொள்பவர்க்கு எய்தும் என்பது பற்றி வடலூர் வள்ளல் அதனை இங்கே சிறப்பித்து எடுத்துரைக்கின்றார். இங்கே வரும் பாட்டுக்கள் முற்ற வுணர்ந்து பலகாலும் பயின்று ஓதுதற்கு உரியவை என்பது விளங்க இவை அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 5576. நினைத்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
உரை: உலகியல் வாழ்வில் இருக்கின்ற நன்மக்களே! பலகாலும் நினைந்து பலவகையாலும் உணர்ந்து மனம் நெகிழ்ந்து அன்பு மிக நிறைந்து அதனால் உள்ளத்திலிருந்து ஊற்றுப்போல் பெருகும் கண்ணீரால் உடம்பு நனைந்து அருளார் அமுதமே, நல்ல அருட் செல்வமே; ஞான நடம் புரிகின்ற அரசர் பெருமானே, என்னுடைய உரிமை நாயகனே என்று சொல் மாலைகளைத் தொடுத்து நாம் வழிபடுதற்கு வருவீர்களாக; அவ்வழிபாட்டால் நாம் மரண பயம் இல்லாத பெருமை பொருந்திய வாழ்வில் இன்பமுற வாழலாம். நான் இதனை இல்லது புனைந்து உரைக்கின்றேன் இல்லை; பொய் சொல்லவுமில்லை; சத்தியமாகச் சொல்லுகின்றேன்; பொன் வேய்ந்த சபையிலுள்ள ஞான சபையில் சிவபெருமான் எழுந்தருளும் தருணம் இதுவே என அறிவீராக. எ.று.
நினைந்து, உணர்ந்து, நெகிழ்ந்து, நிறைந்து, நனைந்து, என்பவற்றை அடுக்கிக் கூறியது மிகுதி உணர்த்துதற் பொருட்டு. ஞானத் திருக்கூத்தாடுபவனாதலால், “ஞான நடத்தரசே” என்றும், தனக்கும் சிவனுக்குமுள்ள உரிமையை விளக்குதற்கு, “என் உரிமை நாயகனே” என்றும் இயம்புகின்றார். வனைதல் - இனிய செஞ்சொற்களாலாகிய சொல் மாலைகளைத் தொடுத்து வழிபடுதல். ஏத்துதல் - துதித்ததல்.மரண பயம் இடை நுழைந்து வருத்துதல் இல்லாத நல்வாழ்வைப் பெறலாம் என்பாராய், “மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்” என உரைக்கின்றார். கண்டீர் - முன்னிலை யசை. புனைந்துரைத்தல் - இல்லாததை அழகுறத் தொடுத்துச் சொல்லுதல். சிற்சபை பொற்சபையின் உள்ளே இருப்பதால், “பொற் சபையில் சிற்சபையில் புகுந் தருணம் இதுவே” என்று புகல்கின்றார். (1)
|