5578.

     பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர்
          பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே
     துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே
          துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த்
     தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க
          சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று
     கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே
          காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் ஆமே.

உரை:

     உலகத்து நன்மக்களே! பலகாலம் பணிந்து மனஅலைவு இன்றி மிகவும் தணிவுற்றுப் பரமசிவனைப் பாடுவீர்களாக; பரம்பரமே என்றும், சிதம்பரமே என்றும், பராபரமே என்றும், வரம் தரும் பொருளே என்றும், பலவகைப் பிரமாணங்களால் தெளியத் தெளிய உணரவந்த வேதாந்தத்தின் சுத்த அனுபவப்பொருளே என்றும், துரிய நிலைக்கு மேல் உள்ள அனுபவப் பரமே என்றும், சுத்த சிவாகமங்களின் முடிவாய்த் தெளிந்த நிலையிலுள்ள பெரிய சுகப் பொருளே. என்றும், இயல்பாகவே என்றும் உள்ளதாகிய தனிப் பெரும் பதியே என்றும், உண்மை ஞானத்தால் உள்ளத்தில் உள்ளவாறு உணர்ந்து மனம் குழைய நினைந்து ஒதுவீர்களானால் அந்தக் கணமே புறக் கண்களால் காணப்படாத சிவயோகக் காட்சிகள் அனைத்தையும் கண்டுகொள்ள முடியும். எ.று.

     பணிந்து என அடுக்கியது மிகுதி உணர்த்துதற்கு. அணிதல் - அழகு செய்தல். மேலாய பொருட்கள் எல்லாவற்றிற்கும் மேலாயது பரம்பொருள் எனப்படுகின்றது. சிதம்பரம் - சிதாகாசம். பரம் - மேல். அபரம் - கீழ். மேலும் கீழுமாகவுள்ள பரம்பொருள் என்பதற்கு, “பரா பரமே” என்று பராவுகின்றார். வரம்தரும் பொருளை வரம் என்பது உபசாரம். துணிதல் - தெளிதல். பலவகைப் பிரமாணங்களால் தெளிந்து வைதிக ஞானத்தால் பெற்ற பிரமானுபவத்தை, “வேதாந்த சுத்த அனுபவமே” என்று உரைக்கின்றார். வேதாந்திகள் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம் என்ற நான்கு அவத்தைகளையே கொள்பவராதலால், “துரிய முடி அனுபவமே” என்று சொல்லுகின்றார். தக்க ஏது எடுத்துக்காட்டுக்களால் தூய்மை செய்யப்பட்ட உண்மைப் பொருளை, “சுத்த சித்தாந்தம்” என மொழிகின்றார். பேரானந்த அனுபவத்தை நல்குவது பற்றிச் சிவனை, “பெரும் சுகமே” என்று பேசுகின்றார். சுத்த சத்தியப் பொருளையே சன்மார்க்கர்கள் விரும்புவராதலால் இயல்பாகவே உண்மைப் பொருளாகவுள்ள சிவபரம்பொருளை, “சமரச சன்மார்க்க சத்தியமே” என்றும், “இயற்கை உண்மைத் தனிப் பதியே” என்று புகழ்கின்றார். கணித்து என்பது எதுகை நோக்கிக் கணிந்து என வந்தது. சிவயோகக் காட்சிகளைக் காணாத காட்சி என்று கட்டுரைக்கின்றார். இதனால், பணிந்து நின்று பலப்படப் பாடி மனம் கனிந்து ஓதிய வழிக் காணாத காட்சி எலாம் கண்டு கொளலாம் என்பது கருத்து.

     (3)