5579.

     கண்டதெலாம் அனித்தியமே கேட்டதெலாம் பழுதே
          கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
     உண்டதெலாம் மனமேஉட் கொண்டதெலாம் குறையே
          உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
     விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
          மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
     எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
          இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.

உரை:

     உலகியலில் வாழ்கின்ற நன்மக்களே! நீங்கள் கண்ணாற் கண்டவை யாவும் நிலை இல்லாதனவாகும்; பிறர்பால் செவியாற் கேட்டதுவும் குற்றமேயாம்; நீங்கள் கற்றவை எல்லாம் பொய்படுவனவாம்; நீங்கள் கண்டும் கேட்டும் மகிழ்ந்தவை வீணாகும்; நீங்கள் வாயால் உண்டவை எல்லாம் மலமாகவும் உள்ளத்தில் கொண்டதெல்லாம் குறை உடையனவாகும்; இதுவரையில் இவ்வகையால் நீங்கள் உண்மைப் பொருளின் உண்மைத் தன்மையை அறிந்தீர் இல்லை; இனி இவற்றை உங்களுக்குச் சொல்வதினால் யாது பயன்; இனிமேல் ஆகிலும் சமரச சன்மார்க்கமாகிய மெய்ம்மை நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருளைத் தெளிய உணர்ந்து சான்றோர் மனத்தால் சிந்திக்கப்படுகின்ற சிற்றம்பலத்தில் உள்ள எந்தையாகிய சிவ பரம்பொருளின் திருவருள் ஞானத்தைப் பெறுவீர் களாக; பெற்றால் மரணமில்லாப் பெருவாழ்வைப் பெற்று இன்பம் பெறலாம். எ.று.

     அனித்தம் - நிலையில்லாதவை. பழுது - குற்றமுடையவை. கண்டும் கேட்டும் கல்வியால் உணர்ந்தும் மனத்தால் மகிழ்ந்தும் வீண் பொழுதைக் கழித்தீர் என்பதற்காக, “நீர் களித்த தெல்லாம் விணே” என்று கழறுகின்றார். உண்ட பொருளால் ஒருபயனும் இல்லை என்பாராய், “உண்ட தெல்லாம் மலமே” என்றும், “உட்கொண்ட தெல்லாம் குறையே” என்றும் கூறுகின்றார். விண்டது - சொன்னது. எண்டகு சிற்றம்பலம் - சான்றோரால் எண்ணப்படும் திருச்சிற்றம்பலம். மரணமில்லாத பெருவாழ்வைப் பெறுவதை “இறவாத வரம்” என்று இசைக்கின்றார். இதனால், சமரச சன்மார்க்கத்தைக் கடைப்பிடித்து உண்மைப் பொருளை உணர்ந்து சிற்றம்பலத்தில் நடித்தருளுகின்ற சிவனது திருவருளைப் பெறுவது மரணமிலாப் பெருவாழ்வுக்கு வழியாகும் என்பதாம்.

     (4)