5580. இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்
எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்
அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன்மார்க்கம்
அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்
பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான
பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே
வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்
மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.
உரை: எம்மிடத்து அன்பு உடையவர்களே இங்கே வாருங்கள்; நான் இன்பம் அடையலாம்; எல்லா உலகினரும் நம்மைப் போற்றிப் புகழ வாழலாம்; எல்லாம் செயல் வல்ல ஞான சித்திக்குத் தலைமையையும் பெற்றுவிடலாம்; இதற்கு நீங்கள் செய்யவேண்டுவது சமரச சன்மார்க்கத்தை மேற்கொள்வீர்களாக; அன்றியும் அகமாகிய மனத்தின்கண் ஒடுங்கும் அகவடிவு நீங்கி எங்கும் பரந்து விளங்கும் கனக வடிவு பெற்றுப் பொன் போல மிகவும் பொலிவுற்று விளங்கும் ஒளிப் பொருளே, புதிது கிடைத்த அருளமுதமே, ஞான நிறைவே, வேதங்கள் உரைக்கும் முடிபொருளாகிய பிரமப் பொருளுக்கு மேல் விளங்கும் பரம்பொருளே, வன்கண்மை யுடையவர் வந்து பெறுதற்கரிதாகிய மாமணியே, ஞான சபையில் எழுந்தருளும் அழகிய மருந்தாகியவனே என்று உங்களுடைய குற்றங்கள் எல்லாவற்றையும் போக்குமாறு வாழ்த்திப் புகழ்வீர்களாக. எ.று.
எல்லாம் செயல் வல்ல சித்தியாவது ஞான சித்தி உடைமை என்றறிக. இறைமை - தலைமை. அகவடிவு - மனத்தின்கண் ஒடுங்கி நிற்கும் சிவத்தின் உருவடிவு. கனக வடிவு என்பது பராபரமாய் எங்கும் பரந்து விளங்கும் பரஞான வடிவு. பொன்போல் என்பது பொன்புடை என வந்தது. வேதங்களின் முடிவு பிரம ஞானப் பெரும் பொருள் என்பதை விளங்க, “ஆரணத்தின் பொருள் முடிமேல் பொருளே” என்று உரைக்கின்றார். வன்கண்மை உடையவர்களை “வன்புடையார்” என மொழிகின்றார். தீமை - தீயவற்றைச் செய்வதால் வரும் குற்றம். இதனால் இங்கே வந்து சமரச சன்மார்க்கத்தை அடைந்து அகவடிவு கனக வடிவாகப் பெற்றுத் தீமைகளைப் போக்கிச் சிவனைப் போற்றுவீராயின் மரணமிலாப் பெருவாழ்வு பெறலாம் என்பதாம். (5)
|