5582.

     நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ
          நெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல்வேனோ
     சார்புறவே அருளமுதம் தந்தெனைமேல் ஏற்றித்
          தனித்தபெருஞ் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான்
     சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச்
          சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த
     ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின்
          உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே.

உரை:

     உலகியற் பெருமக்களே! நீவிர் என்னின் வேறோ? வேறல்லவே; யானும் உங்கட்கு அன்புடைய உறவினனல்லவா; உங்கட்கு நல்ல கொடிய சொற்களையே எடுத்துச் சொல்வதை விடுத்துக் கொடுமை யானவற்றைச் சொல்லுவேனோ; இதனை எண்ணி நான் உரைப்பதைக் கேட்பீராக; யான் தன் பக்கலிலே இருக்குமாறு எனக்கு அருள் ஞான அமுதத்தைத் தந்து என்னை மேற்பட உயர்த்தி ஒப்பற்ற பெரிய இன்பத்தைத் தந்தருளிய தனிமுதல்வனாகிய சிவபெருமான் நாமெல்லாம் நலம் பெறும் பொருட்டுத் திருச்சிற்றம்பலத்தில் அருள் திருமேனி கொண்டு ஞானத் திருக்கூத்தாடுகின்ற நல்ல நாட்கள் அடுத்துள்ளனவாதலால் தெளிவாகச் சிவபோகத்தை நுகர்வதற்கு இது நல்ல தருணமாதலால் இங்கே என்பால் வருவீர்களாக; வந்தால் விரைவில் நீங்கள் எண்ணிய எண்ணமெல்லாம் கைகூடப் பெறுவீர்கள். எ.று.

     தாம் கூறுவதை உலகத்தவர் மயங்கிப் புறக்கணிக்காமை பொருட்டு, “நீர் பிறரோ யான் உமக்கு நேய உறவலனோ” என்றும், “நெடுமொழியே உரைப்பனன்றிக் கொடுமொழி சொல்வேனோ” என்றும், கூறுகின்றார். நெடுமொழி - தீமையும் துன்பமும் நிறைந்த சொற்கள். சார்பு - பக்கல். நிலைத்த பெருஞ் சுகநிலையாதலால் சிவபோகத்தை, “தனித்த பெருஞ் சுகம்” என்று சாற்றுகின்றார். திருப்பொது -திருச் சிற்றம்பலம். சித்தாடல் - ஞானத் திருக்கூத்து. இனிதுணர்ந்து இன்பம் பெறுதற்கு என்பாராய், “ஓர்புறவே” என்று உரைக்கின்றார். ஓர்பு - உணர்தல். இதனால், பெரும் பதியாகிய சிவன் திருப்பொதுவில் அருட் டிருமேனி கொண்டு சித்தாடல் புரிகின்ற நன்னாள் அடுத்து வருதலால் இது நல்ல தருணம் என்று கொண்டு என்பால் வருக; வந்தால் எண்ணியதை எண்ணிவாறு பெறுவீர்கள் என்பதாம். உண்ணுதல் - எண்ணுதல்.

     (7)