5583. விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே
மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர்
திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும்
செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய
வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே
வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவிர்
கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களின்நீர் பெருகிக்
கருணைநடக் கடவுகளைஉட் கருதுமினோ களித்தே.
உரை: மண்ணுலகில் வாழும் நன்மக்களே! யான் உண்மைகளையே உரைக்கின்றேன்; ஆதலால் பொய்யென்று வேறுபட நினைக்காமல் மிகவும் விரைந்து இங்கே வருவீர்களாக; உடல் மேனி மிகவும் சுருங்கி மெலிந்த முதியவரும் இளமை நலத்தைப் பெறவும் செத்தவர்கள் உயிர் பெற்றெழவும் ஞானக் கூத்தாடுகின்ற எல்லாவற்றையும் வரையறுத்துச் செய்ய வல்ல ஞானவானாகிய சிவபெருமான், தானே மனமுவந்து வருகின்ற தருணம் இதுவாகையால் வேண்டும் வரங்களைப் பெறுதற்கு நீங்கள் கண்ணாரக் கண்டு மனம் கரைந்து உள்ளம் உருகிக் கண்களில் நீர் சோர அருள் நடம் புரிகின்ற அக்கடவுளை மனத்தில் சிந்திப்பீர்களாக. எ.று.
மேதினி - மண்ணுலகம். மெய்யுரைகளை -“மெய்ம்மை” என்று விளம்புகின்றார். பொய் என்று நினைக்க வேண்டாம் என்பதற்கு, “நீர் வேறு நினையாதீர்” என்று வேண்டுகின்றார். திரைதல் - உடம்பின் தோல் சுருங்குதல். செத்தவர் என்பது உளுத்தவர் என வந்தது, சித்தாடல் - ஞானக் கூத்து. சித்தன் - ஞானவான். எதனையும் அளவிட்டுச் செய்பவனாதலால் சிவபெருமானை, “வரைந்து வரைந்து எல்லாம் செய் வல்ல சித்தன்” என்று பாராட்டுகின்றார். இதனால், எல்லாம் செய்யவல்ல சித்தனாகிய சிவபெருமான் முதுமையால் தோல் திரைந்து மெலிந்த முதியவர்கள் இளமை பெறவும், செத்தவர்கள் உயிர் பெற்றெழவும் சித்தாடல் புரிய வருகின்ற தருணம் இதுவாகையால் நீங்கள் மனம் கரைந்து உள்ளம் உருகிக் கண்ணீர் சொரிய அவனைக் கருத்தில் மகிழ்வோடு சிந்திப்பீர்களாக என்பதாம். (8)
|