5584.

     களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம்
          களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம்
     தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே
          செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர்
     ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன்
          ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்
     அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன் அருள் பெறவே
          ஆசைஉண்டேல் வம்மின் இங்கே நேசமுடை யீரே.

உரை:

     உலகத்தில் வாழும் நன்மக்களே! உலகெல்லாம் மிக மகிழ்ந்து அளிவில்லாத காலம் இனிதிருக்குமாறு அருட் பெருஞ் சோதியை உடைய கடவுளாகிய சிவபெருமான் நம்பால் வந்து நம்முடைய அறிவைத் தெளிவிக்கும் காலம் எக்காலமோ என்று எண்ணி ஏங்க வேண்டியதில்லை; இதுவே அவர் வந்து செத்தவர்களை எழுப்புதற்குரிய நல்ல காலமாகும்; நான் எதனையும் மறைத்துச் சொல்கின்றேன் இல்லை; என் வாயையே பரையாகக் கொண்டு முழக்குகின்றேன்; நான் சிறிதும் அச்சம் கொள்ளவில்லை; உள்ளதை உள்ளபடி உணர்ந்து உரைக்கின்றேன்; எல்லார்க்கும் அருள் புரியும் சிற்றம்பலத்தில் உள்ள சிவனுடைய திருவருளைப் பெறுதற்கு உள்ளத்தில் ஆசை இருக்குமானால் நீங்கள் என்னுடைய அன்பை உடையவர்களாதலால் இங்கே என்பால் வருவீர்களாக. எ.று.

     அருட் சோதிக் கடவுளின் அருளினால் உலகனைத்தும் எண்ணிறந்த காலம் இன்ப வாழ்வில் திளைக்கும் காலம் எந்நாள் எய்துமோ என்று ஏங்க வேண்டுவதில்லை என்பாராய், “உலககெல்லாம் அளிவிகந்த காலம் களிப்படைய அருட்சோதிக் கடவுள் வருதருணம் எத்தருணம் அதோ என்னாதீர்” என்று தெளிய உரைக்கின்றார். ஒளிந்துரைத்தல் - உண்மையை மறைத்துப் பேசுதல். உள்ளபடி உள்ளபடி உணர்ந்து உரைக்கின்றேனாதலால் எனக்கு அச்சமில்லை என்பாராய், “ஒரு சிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணரந்தேன்” என உரைக்கின்றார். இதனால், உலகமெல்லாம் அளவிறந்த காலம் களிப்படைய அருட் சோதிக் கடவுள் அருள் வழங்கவும் செத்தவரை எழுப்பவும் எழுந்தருளுகின்ற தருணம் இதுவாகையால் அவன் திருவருளைப் பெறுதற்கு ஆசையாயின் உடனே வருவீர்களாக என்று உரைத்தவாறாம்.

     (9)