5586.

     அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர்
          அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம்
     கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே
          காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம்
     இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர்
          யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்
     உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா
          ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே.

உரை:

     உலகத்து நன்மக்களே! அருட் சோதியையுடைய பெருந்தலைவரும் எனக்குத் தந்தையுமாகிய சிவபெருமான் இங்கு எழுந்தருளும் காலம் இதுவாகும் என்பதை உணர்ந்து இங்கே என்னை அடைவீர்களாக; கடைந்தெடுத்த ஒப்பற்ற திருவருளாகிய அமுதத்தை எனக்கு மகிழ்ச்சியுடன் அளித்து நான் இதுகாறும் காணாத அருட் காட்சிகள் எல்லாவற்றையும் காட்டி அருளுகின்ற இத்தருணத்தில் ஒருபால் நீங்கி வீணில் அலைய வேண்டாம்; என்னைப்போல் நீங்கள் அருட் சுகத்தைப் பெறுவீர்கள்; நீங்கள் வேறு யான் வேறு என்று எண்ணுபவன் அல்லனாதலால் இதனை உங்களுக்கு உரைக்கின்றேன்; அழிவில்லாத உயர்ந்த ஒரு நெறியாகிய சன்மார்க்கத் திருநெறியை மேற்கொண்டு மனமகிழ்ச்சியுடன் மெலிந்த பழைய சமயங்களாகிய குழியிலிருந்து கரையேறி உணர்வு பெறுவீர்களாக. எ.று.

     செம்மையாக எடுக்கப்பட்ட திருவருள் அமுதம் என்பது விளங்க, “கடைந்த தனித் திருவமுதம்” என்று கூறுகின்றார். அருத்துதல் - உண்பித்தல். அருள் ஞானத்தாலன்றிக் காணப்படாத அருட்காட்சிகளைக் “காணாதக் காட்சி” என்று கட்டுரைக்கின்றார். இடைதல் - நீங்குதல். பழைமையுற்று வன்மை மெலிந்த சமயங்களை, “உடைந்த சமயக் குழி” என்று உரைக்கின்றார். ஒரு நெறியாம் சன்மார்க்கத் திருநெறி என்று சிறப்பிக்கின்றாராதலால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்குமாறு இதனால் வேண்டுகின்றார் என்பதாம்.

     (11)