5587.

     திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்
          சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு
     வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து
          வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்
     பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்
          பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே
     கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடையாதீர்
          கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.

உரை:

     உலகத்துப் பெருமக்களே! திருநெறி என்பது ஒன்றேயாம் பலவன்று; அஃதாவது சமரச சன்மார்க்கச் சிவநெறி என்று உணர்ந்து இவ்விடத்தே ஒருங்கு வந்து சேர்வீர்களாக; இப்போது வெளி வருகின்ற இச் சிவநெறியில் என்னை ஆளாகக் கொண்டு அருள் ஞான அமுதத்தை அளித்து வல்லமை மிக்க சத்திகள் பலவும் எனக்குத் தந்தருளிய வள்ளலாகிய சிவபெருமான் பெருமை தரும் நெறியில் ஞானத் திருக்கூத்தாட எண்ணம் கொண்டு பேரருளே உருவாகப் பெற்று இங்கே வருகின்ற தருணம் இதுவாகும்; பிறபிறப்பாகிய துன்பச் சூழலில் கிடந்து வருந்தாமலும் கலக்கமடையாமலும் நான் சொல்வதைக் கேட்பீர்களாக; எனக்கு உங்கள்பால் உள்ள கண்ணோட்டத்தால் கருத்து மிகுந்து நீவிர் ஒருங்கு உணருமாறு உண்மையை எடுத்துரைக்கின்றேன். எ.று.

     திருநெறியாவது சமரச சன்மார்க்கச் சிவநெறி என்று வற்புறுத்துவதற்காக, “திருநெறி ஒன்றே அதுதான் சமரச சன்மார்க்கச் சிவநெறி என்றுணர்ந்து ஈண்டுச் சேர்ந்திடுமின்” என்று இயம்புகின்றார். இச் சிவ நெறியை மேற்கொண்டதின் பயனாகச் சிவபெருமான் எனக்கு அருள் ஞானமும் வல்லமை யாவும் பொருந்திய சத்திகளையும் வழங்கியுள்ளான். அதனை நீவிரும் பெறலாம் என்று விளக்குதற்கு, “வரும் நெறியில் என்னை ஆட்கொண்டு அருளமுதம் அளித்து வல்லப சத்திகள் எல்லாம் வழங்கிய வள்ளல்” என்று சிவபெருமானைக் குறிக்கின்றார். அமுதம் போல் இன்பம் விளைவித்தலால் சிவஞானத்தை, “அருளமுதம்” என்று புகழ்கின்றார். வல்லபம் - வல்லமை. பெருநெறியாவது சிவஞானத் திருக்கூத்தாடும் உயர்ந்த நெறி. கூத்தப் பெருமானுடைய உருவம் அருள் திருமேனி கொண்டதாகலால் அதனை, “கருணை வடிவு” என்று சிறப்பிக்கின்றார். கருநெறி - உலகில் பிறந்து வளர்ந்து இறந்தொழிவது. கண்மை - கண்ணோட்டம் உடைமை. இதனால், உங்கள்பால் உள்ள இரக்க மிகுதியால் மனம் ஒருமித்து நான் கண்ட உண்மைகளை இவ்வாறு உரைக்கின்றேனாதலால் கலக்கமடையாது சன்மார்க்கச் சிவநெறியை ஏற்றுக் கொள்வீர்களாக என்பதாம்.

     (12)