5590. சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்தம் எல்லாம்
தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய்
நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்
நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியே
அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன்
ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச்
சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர்
சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே.
உரை: உலகத்தில் வாழும் நன்மக்களே! சத்தியமான வேதாந்த நூல்களும் சித்தாந்த நூல்களும் தனித்தனியாக மேல் மேலாய் நுணுகி உணர்ந்தும் உணர்தற்கு அரியதாய் என்றும் உள்ள ஞானசபையின் நடுவிலே இருந்து எங்கும் நிறைந்து ஞான நடனம் புரிகின்ற நித்திய பரிபூரணனாகவுள்ள பெரிய தலைவனும், சித்தத்தில் வீற்றிருக்கும் முடிமணியும், அச் சித்தர்களுக்குப் பெரிய தலைவனும், பெறுதற்கரிய அமுது போல்பவனும், அடியேனுக்கு உயிரும், அவ்வுயிரினுள் அன்போடு எழுந்தருளும் தயாநிதியும், சித்திகள் யாவையும் எனக்குத் தந்தருளிய சிவகதியுமாகிய பரமசிவனை உங்களைப் பற்றியிருக்கும் குற்றமெல்லாம் நீங்கும்பொருட்டு மனத்தால் நினைந்து வாழ்த்துவீர்களாக. எ.று.
உண்மைகளே உரைப்பனவாதலால், “சத்திய வேதாந்த சித்தாந்த மெல்லாம்” என்று கூறுகின்றார். வேத வைதிகர்களாலும் வைதிகச் சித்தாந்திகளாலும் தனித்தனியாக ஆராய்ந்தும் உணர்தற்கு எட்டாதது பரம்பொருள் என்பாராய், “தனித்தனி மேல் உணர்ந்துணர்ந்தும் உணர்தற்கரிதாய்” என்று ஓதுகின்றார். என்றும் உள்ளமை விளங்க ஞானசபையை, “நித்திய சிற்சபை” என்று குறிக்கிறார். பரிபூரணன் - குறைவற நிறைந்தவன். சித்த சிகாமணி - சிந்தையின் கண் முடிமணியாய் விளங்குபவன். உயிர்க்குயிராய் இருப்பது பற்றி, “ஆவியை ஆவியில் அமர்ந்த தயாநிதியே” என்று அறிவிக்கின்றார். தயாநிதி - தயவாகிய செல்வத்தை உடையவன். சித்திகள் - கன்ம யோக சித்திகள். சிவகதியைத் தருபவனாதலால் சிவனை, “சிவகதி” என்று செப்புகின்றார். நிந்தை - குற்றம். இதனால், உணர்வரியவனும் பரிபூரணனும் சிகாமணியும் பெரும் பதியும் அருமருந்தும் தயாநிதியும் சிவகதியுமாகிய பரமசிவனை, குற்றங்கள் எல்லாம் நீங்கி மனத்தால் நினைந்து வாழ்த்துவீரானால் மரணமிலாத இன்பப் பெருவாழ்வைப் பெறலாம் என்பதாம். (15)
|