5591. நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை
நிலையனைத்தும் காட்டிஅருள் நிலைஅளித்த குருவை
எந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை
என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை
சிந்தையிலே தனித்தினிக்கும் தெள்ளமுதை அனைத்தும்
செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர்
முந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண
முடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே.
உரை: உலகில் வாழும் நன்மக்களே! குற்றமில்லாத பெரு மக்களின் மனத்தின்கண் நிறைந்து விளங்கும் பெருந்தகையும் இன்ப ஞான நிலை யாவற்றையும் காண்பித்துப் பெறுதற்குரிய அருள் நிலையை உபதேசித்தருளிய குருபரனும், எனக்குத் தந்தையும், ஒப்பற்ற தாயும், என்னுடைய இரண்டு கண்மணி போல்பவனும், என்னுடைய உயிராகியவனும், உயிர்க்கு உணர்வாகியவனும், என் அறிவுக்குள் அறிவாய் இருப்பவனும், என் மனத்தின்கண் தனிநின்று இனிக்கின்ற தெளிந்த அமுதாகியவனும், எல்லாவற்றையும் செய்யவல்ல தலைமைப் பொருந்திய சிவலோகத் தலைவனுமாகிய சிவ பரம்பொருளை மனம் முதலிய கரணங்களின் குற்றத்தைப் போக்கிக் கடைப்பட்ட மரண வேதனையால் உண்டாகிய அச்சத்தை முயன்று நோக்கி அனாதியே பற்றிய மலவிருள் நீங்குமாறு நினைந்து போற்றுவீராக. எ.று.
நிந்தை - குற்றம். பெருந்தகை - சிறந்த குணத்தால் பெருமை பெற்றவன். நிலை -சிவஞானத்தால் எய்தப்படும் பெரிய நிலை. கருவி கரணங்களோடு கூடி யறியும் செயலை “அறிவு” என்று கூறிகின்றார். மனத்தின்கண் எழுந்தருளி நினைக்குந்தோறும் தேனூறி இன்பம் செய்தலால், “சிந்தையிலே தனித்து இனிக்கும் தெள்ளமுது” என்று கூறுகின்றார். சிவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லையாதலால் அப்பெருமானை, “தனித் தலைமைச் சிவபதி” என்று சாற்றுகின்றார். அனாதியே பற்றிய மலமாதலால் அதனை, “முந்தை மலம்” என்றும், அது உயிர்களின் உணர்வை மறைத்து அறியாமையை விளைவிப்பதால், “மல இருட்டு” என்றும் மொழிகின்றார். முன்னுதல் - நினைத்தல். கரணங்கள் -மனம் வாக்கு காயம் ஆகிய மூன்றும். முடுக்கு - குற்றம். சாதலின் இன்னாதது என்று பெரியோர்கள் கூறுவதால் அதனை, “கடை மரணம்” என்று இழித்துரைக்கின்றார். இதனால், பெருந்தகையும் குருபரனும் தந்தை தாயரும் கண்மணியும் உயிரும் உணர்வும் அறிவும் தெள்ளமுதும் சிவபதியுமாகிய பரமசிவனைக் கடை மரண நடுக்கொழிந்து மலவிருட்டொழிய வழிபடுவீர்களாக என்பதாம். (16)
|