5594. நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்கள்எலாம் பெறவே
தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவிர்
தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.
உரை: உலகில் வாழும் நம்மவர்களே! நான் உரைக்கும் சொற்கள் யாவும் நாயகனாகிய சிவனுடைய சொற்களாகும்; ஆதலால் என்னை நம்புவீர்களாக; பெருமை பொருந்திய அழகிய அம்பலத்தில் திருக்கூத்தாடி அருளும் எம்பெருமானாகிய சிவன் இங்கே எழுந்தருளும் நல்ல தருணம் இதுவாதலால் அவன் வருகையை எதிர்கொண்டு அவனுடைய திருவருளால் வரங்கள் யாவற்றையும் பெறுதற்கு நாவில் தேன் சுரக்க உள்ளத்தில் இனிமை தழைக்க நான் புறப்படுகின்றேன்; நீங்களும் உண்மை தெரிந்து என்னுடன் எழுந்திருப்பீராக; உங்கட்கும் எல்லாச் சித்திகளும் கைவரும்: நான் இதனை ஏன் உரைக்கின்றேன் என்றால் உங்கள்பால் எனக்குள்ள இரக்கத்தாலும் யான் அடையும் பேரின்பத்தை நீங்களும் அடைதல் வேண்டும் என்ற கருத்தாலும் எடுத்துரைக்கின்றேன் என அறிவீர்களாக. எ.று.
நான் உரைக்கின்ற சொல் யாவும் நாயகனாகிய சிவனுடைய வார்த்தைகளாதலால் இவற்றை மெய்யென நம்பி எம்பொருமான் வருகின்ற தருணம் இதுவாதல் எண்ணி அவனை வரவேற்று வரம் பலவும் பெறுவோமாக; வரவேற்பதற்கு நான் புறப்படுகின்றேனாதலால் நீங்களும் என்னோடு உடன் எழுவீர்களாக; இதனையும் உங்கள்பால் எனக்குள்ள இரக்கத்தாலும் நான் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற வேண்டும் என்ற எண்ணத்தாலும் எடுத்துரைக்கின்றேன் என்பதாம். (19)
|