5595.

     குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின்இங்கே வம்மின்
          கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
     வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
          மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்
     பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்
          புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்
     செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்
          சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.

உரை:

     உலகத்து நன்மக்களே! உங்களை மனத்திற் கொண்டு உரைக்கின்றேனாதலால் இதனைக் கேட்டற்கு என்பால் வருவீர்ளாக; நெறி மாறிச் செல்லும் மனமாகிய குரங்கினால் நீங்கள் வருவதற்கு நாணுகின்றீர்கள்; மருண்டிருக்கும் உங்களிடத்தில் நான் ஒரு பயனையும் எதிர்பார்க்கின்றேன் இல்லை; எனது மெய்யான உரையைப் பொய்யெனக் கருதி வேறாக நினைக்க வேண்டா: எழுதப்பட்ட மதங்களும் சமயங்களும் யாவும் பொய்யேயாகும்; அவற்றை மனங் கொள்ளாது சிவம் ஒன்றே பரம்பொருள் எனத் தெளிவாக அறிவீர்களாக; அன்பு நிறைந்த ஞான சபையில் அப்பெருமானுடைய திருநடனத்தைத் தெரிந்து துதிப்பீர்களாக; துதித்தல் சத்தியமாக எல்லாச் சித்திகளும் இன்றே உம்மிடம் வந்து சேரும். எ.று.

     நெறியல்லா நெறியில் மனம் செல்லுகிறபடியால் அதனை, “கோணும் மனக்குரங்கு” என்று கூறுகின்றார். தாம் கூறுவதை ஏற்க மாட்டாமல் விழிக்கின்ற நிலைமையைக் காண்கின்றாராதலால், “நாணுகின்ற உலகீர்” என்று நவில்கின்றார். பயனில்லாமல் நிற்பது பற்றி, “வெறித்த உம்மால்” என்று விளம்புகின்றார். மதங்களும் சமயங்களும் ஏட்டில் எழுதப்பட்டுப் பலராலும் போற்றப்படுவதால் அவற்றை விலக்குதற்கு, “பொறித்த மதம் சமயம் எலாம் பொய் பொய்யே” என்று புகல்கின்றார். செறித்திடு சிற்சபை - அன்பு செறித்த ஞான சபை. இதனால், தம்முடைய மெய்யுரையைப் பொய்யுரையாய்க் கொள்ளவேண்டாம் என்றும், சமயங்களும் மதங்களும் பொய்யென்று போக்கிச் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டு ஞான சபை நடனத்தைத் தெரிந்து துதிப்பீர்களாக என்று தெரிவித்தவாறாம்.

     (20)