5600. இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்.
சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்
சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு
பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.
உரை: உலகத்து நன்மக்களே! செத்தவர்களை அடக்கம் செய்ய எடுக்கும்போது வாய்விட்டுப் புலம்புகின்றீர்களே அன்றிச் சாவாத பெரிய வரத்தை ஏனோ பெறாது ஒழிகின்றீர்கள்: மரணத்தை மறந்திருக்கின்றீர்களாதலால் பிணியும் முதுமையும் அடைவதற்கு உங்களுக்கு இசைவோ? இதை நினைக்கில் நல்லோருடைய மனம் மறப்பிலும் நடுங்கும் என அறிவீர்களாக; சிறந்த சன்மார்க்கம் ஒன்றே நோயும் முதுமையும் சாக்காடும் ஆகிய இவற்றை வந்து பொருந்தாதபடிப் போக்கிவிடும் என்பதைத் தெரிந்து எம்மிடத்து வருவீர்களாக; பிறந்திருக்கின்ற இப்பிறப்பிலேயே மரணமில்லாத நித்திய உடம்பொடுகூடிய வாழ்வைப் பெறலாம்; பேரின்பத்தையும் விரைவில் அடையலாம். எ.று.
அரற்றுதல் - ஓ எனக் கதறிப் புலம்புதல். சாவா வரத்தை ஏன் பெறாது ஒழிகின்றீர்கள் என வினவுவாராய், “இறவாத பெருவரம் நீர் ஏன் அடைய மாட்டீர்” என்று வினவுகின்றார். வரம் பெற வாய்ப்பிருந்தும் நீவிர் மறந்தொழிந்தீர்கள் என்பாராய், “மறந்திருந்தீர்” என்று குறிக்கின்றார். சம்மதம் - விருப்பம். இறவாத பெருவரத்தைப் பெறுவதற்குச் சன்மார்க்கம் ஒன்றே சிறந்த நெறி என உரைப்பாராய், “சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம் சேராமல் தவிர்த்திடும் காண்” என்று தெரிவிக்கின்றார். உடம்பொடு கூடியிருக்கும் இப்பிறப்பிலேயே இறவா வாழ்வை எய்தலால் என வற்புறுத்தற்கு “பிறந்த பிறப்பு இதிற்றானே நித்திய மெய்வாழ்வு பெற்றிடலாம்” என்றும், “பேரின்பம் உற்றிடலாம்” என்றும் எடுத்துரைக்கின்றார். இதனால், பிணி மூப்பு மரணம் என்ற இவற்றை நினைத்தால் நல்லோர் மனம் நடுங்குகின்றார்கள் ஆதலால் அவற்றை வாராமல் தடுப்பதற்கு அமைந்தது சன்மார்க்கம் ஒன்றே என்றும், அதனைத் தெரிந்து கொண்டு இங்கே வந்தால் நித்திய மெய்வாழ்வு பெறலாம்; அன்றியும் பேரின்பமும் உற்றிடலாம் என்று தெரிவித்தவாறாம். பேரின்பம் என்றவிடத்து உம்மை தொக்கது. (25)
|