5601.

     உற்றமொழி உரைகின்றேன் ஒருமையினால் உமக்கே
          உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்
     கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்
          கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ
     சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது
          தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
     இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்
          என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.

உரை:

     உலகில் வாழும் நன்மக்களே! உங்களுக்கு மனஉரிமையுடன் ஏற்ற சொல் ஒன்றைச் சொல்லுகின்றேன்; நான் உங்களுக்கு உறவினனே யன்றிப் பகைவன் என என்னை நினைக்க வேண்டா; கற்றவர்களும் கல்லாதவர்களும் இறந்தொழிவது காண்கின்றீர்கள்; மனம் முதலிய கரணங்கள் எல்லாம் நிலை கலங்க வருகின்ற மரணம் எய்துவது உங்களுக்கு இசைவுதானோ? என் மனமோ அதனை ஒரு பொழுதும் ஏலாது; உம்முடைய மனம் கல்லோ வன்மனமோ அறியேன்; இன்றே இதனைத் தடுத்துக்கொள்ளலாம்; என்னோடு வந்து சேர்வீர்களாக; யான் மேற்கொண்டிருக்கும் நெறி மரணத்தைத் தவிர்க்கும் சன்மார்க்க நெறியாகும் என அறிவீர்களாக. எ.று.

     அன்புடன் உறுதியாக நின்று சொல்லுகின்றாராதலால், “ஒருமையினால் உமக்கு உற்ற மொழி உரைக்கின்றேன்” என்று கூறுகின்றார். உறவன் - உறவுடையவன். மரணம் எய்துமிடத்துப் புலனைந்தும் நெறி மயங்கி அறிவழிந்து கலங்குவதால், “கரணம் எலாம் கலங்க வரும் மரணம்” என்று மொழிகின்றார். மரணம் இயல்பு என்று கருதுகின்றவர்களை மறுக்கின்றாராதலால், “உமது மனந்தான் கன்மனமோ? வன் மனமோ? அறியேன்” என்று சொல்லுகின்றார். இன்று என்பது இற்று என வந்தது. சன்மார்க்கம் மரணத்தைத் தவிர்க்கும் நெறியாதலால் என்னொடு சேர்வீர்களானால் மரண நிலை உங்கட்கு எளிதில் ஒழிந்து விடும் என்பாராய், “என்னொடும் சேர்ந்திடுமின் என்மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம்” என இயம்புகின்றார். இதனால், கற்றவரும் கல்லாதவரும் இறந்தொழிவதைக் காண்பதால் கரணங்கள் கலங்கவரும் மரணத்தை ஏற்க என் மனம் சம்மதிக்கின்றதில்லை; என்னொடு சேர்ந்திடுமின்; இப்பொழுதே மரணத்தைத் தவிர்க்கலாம்; என் மார்க்கம் இறப்பை ஒழிக்கும் சன்மார்க்கமாகும் என்று தெரிவித்தவாறாம்.

     (26)