5602. சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத்
தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை
நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்க
நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப்
புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான
பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை
அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய்
அருட்பெருஞ்சோ தியைஉலகீர் தெருட்கொளச்சார் வீரே.
உரை: உலகத்து நன்மக்களே! சன்மார்க்கத்துக்குரிய பெரிய குணங்களை உடையவர்க்குப் பதிப்பொருளும் எளியனாகிய என்னைத் தாங்கி அருளுகின்ற பெரிய முதல்வனும் ஒப்பற்ற ஞானசபைக்குத் தலைவனும், தன்னுடைய நல்ல மார்க்கத்தில் என்னைச் செலுத்திச் சன்மார்க்க சங்கத்தின் நடுவே இருக்குமாறு அருள்ஞான அமுதத்தை எனக்குத் தந்தருளிய நாயகனும், தீய மார்க்கத்தில் ஒழுகுபவர்க்கு அறிதற்கரிதாகிய புண்ணியப் பொருளும், குறைவின்றி நிறைந்த மெய்ப்பொருளாய் அமைந்த தெய்வ மருந்து போல்பவனும், அல்லாத நெறிகளைப் போக்கி அம்பலத்தில் அருள் நடனம் புரிகின்ற அருட் பெருஞ்சோதியுமாகிய பரமேசுவரனைத் தெளிய உணர்ந்து அவனது சன்மார்க்கத்தைச் சேர்வீர்களாக. எ.று.
உயர்ந்த பெரிய குணங்களை உடையவரன்றி மற்றவர்களால் சன்மார்க்கத்தின் தன்மையை உணர்ந்து அதனைச் சார முடியாது என்பாராய், “சன்மார்க்கப் பெருங்குணத்தார்” என்று சாற்றுகின்றார். அருள் ஞானநெறி என்பது விளங்க “நன்மார்க்கம்” என எடுத்துரைக்கின்றார். நன்மார்க்க நெறியை மேற்கொண்டாலன்றிச் சன்மார்க்க சங்கத்தைச் சேரவியாலது என்பது பற்றி, “நன்மார்க்கத்து எனை நடத்திச் சன்மார்க்க சங்க நடுவிருக்க அருளமுதம் நல்கிய நாயகன்” என்று சிவன் சிறப்பை இயம்புகின்றார். உயர்ந்த அறவுணர்வும் ஒழுக்கமும் இல்லாத மார்க்கம் புன்மார்க்கம் என்றும், அம்மார்க்கத்தில் நிற்பவர்க்குச் சிவபுண்ணியப் பொருளாகிய பரசிவத்தை அறியமுடியாது என்பதனால், “புன்மார்க்கர்க்கு அறிவரிதாம் புண்ணியன்” என்றும் புகல்கின்றார். அருள்நெறியல்லாத பிறவற்றை “அன்மார்க்கம்” என்று அறிவிக்கின்றார். இதனால், சன்மார்க்கப் பெருங்குணத்தாருடைய பதிப்பொருளும், அடியார்களைத் தாங்குகின்ற பெரும் பதியும், சபாபதியும், அருளமுது நல்கும் நாயகனும், புண்ணியப் பொருளும், மெய்ப்பொருளாய் அமைந்த மாமருந்தும், அருட்பெருஞ் சோதியும் ஆகிய பரமசிவனைத் தெளிய உணர்ந்து அடைவீர்களாக என்று உபதேசித்தவாறாம். (27)
|