135. சமாதி வற்புறுத்தல்

    அஃதாவது, இறந்தாரை அடக்கம் செய்வதுபற்றிச் சில கருத்துக்களை வற்புறுத்தி மொழிதல். இறந்தவரைச் சுடுதலாகாது என்பது வடலூர் வள்ளலின் திருவுள்ளமாதலால் இப் பகுதிக் கண் அதனை மக்கள் அறிந்துகொள்ளுமாறு விளங்க உரைக்கின்றார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

5604.

     ஆய்உரைத்த அருட்சோதி வருகின்ற
          தருணம்இதே அறிமின் என்றே
     வாய்உரைத்த வார்த்தைஎன்றன் வார்த்தைகள்என்
          கின்றார்இம் மனிதர் அந்தோ
     தாய்உரைத்த திருப்பொதுவில் நடம்புரிந்தென்
          உளங்கலந்த தலைவா இங்கே
     நீஉரைத்த திருவார்த்தை என அறியார்
          இவர்அறிவின் நிகழ்ச்சி என்னே.

உரை:

     நுணுகிக் கண்டுரைத்த அருட்சோதி இறைவன் வந்தருளும் சமயம் இதுவே என அறிவீர்களாக என்று சொல்லிய வார்த்தைகள் யான் என்னுடைய வாயில் வந்தபடி பேசிய வார்த்தைகள் என்று இங்கே உள்ள மனிதர்கள் பேசுகின்றார்கள்; ஐயோ! பரவலாகப் பொன்வேய்ந்த அழகிய அம்பலத்தில் திருநடம் புரிந்து என் மனத்தில் கலந்திருக்கின்ற தலைவனே! என் வார்த்தைகள் யாவும் எனக்குள் இருந்து நீ உரைத்த தெளிவான வார்த்தைகள் என்று அறிகின்றார்கள் இல்லை; இவர்களுடைய அறிவின் விளக்கத்தை என்னென்று சொல்வது. எ.று.

     ஆய் உரைத்தல் - நுணுகி உணர்ந்து உரைத்தல். ஆய்தல் - நுணுகுதல். வாய் உரைத்தல் - மனத்தொடு பொருந்தாமல் வாயில் வந்ததைப் பேசுதல். தாவ உரைத்தல் - தாய் உரைத்தல் என வந்தது. தாவியே என்பது தாய் என வந்தது. தாய் உரைத்தல் என்பதில் உரைத்தல் என்பது பொன் வேய்தல். அம்பலம் பொன் வேயப்பட்டதாதலால் அதனை, “தாய் உரைத்த திருப்பொது” என்று சிறப்பிக்கின்றார். தலைவனாகிய சிவன் தமக்குள் இருந்து உரைப்பனவற்றையே தாம் உரைப்பதாகவும் அதனை உலகத்து மக்கள் உணராமல் இருப்பதாவும் வடலூர் வள்ளல் இதனால் எடுத்துரைக்கின்றார். தாம் தம்முடைய பாட்டாலும் உரையாலும் பலவகையில் எடுத்துரைத்தும் உலகத்து மக்களில் பலர் தம் உரைகளை ஏலாது ஒழிந்தமை கண்டு வருந்திக் கூறுகின்றார் என்பது அறிக.

     (1)