5606.

     சோற்றாசை யொடுகாமச் சேற்றாசைப்
          படுவாரைத் துணிந்து கொல்லக்
     கூற்றாசைப் படும்என நான் கூறுகின்ற
          துண்மையினில் கொண்டு நீவீர்
     நேற்றாசைப் பட்டவருக் கின்றருள்வார்
          பேரலும்அன்றி நினைத்த வாங்கே
     பேற்றாசைக் கருள்புரியும் ஞானசபா
          பதிப்புகழைப் பேசு வீரே.

உரை:

     உண்ணும் சோற்றின் மீதும் நுகரப்படும் கொடிய காமமாகிய சேற்றின் மேலும் மிகுந்த ஆசை கொள்பவரைத் தெரிந்து கொல்லும் பொருட்டு எமன் ஆசைப்படுவான் என்று நான் சொல்வது உண்மை எனக் கொண்டு நேற்று ஆசைப்பட்டவர்க்கு இன்று அருள் புரிபவர் போலல்லாமல் நினைத்த பொழுதே ஆசைப்பட்டவர்க்கு அருள் புரிபவனாகிய ஞான சபாபதி என்னும் கூத்தப் பெருமானுடைய புகழை விரும்பிப் பேசிப் போற்றுவீர்களாக. எ.று.

     சோற்றாசை - உண்ணும் உணவின் மேல் உண்டாகும் ஆசை. காமச் சுவையைக் “காமச் சேற்றாசை” என்று கூறுகின்றார். துணிதல் - இரக்கமின்றிச் செய்தல். கூற்று - எமன். நேற்று ஆசைப்பட்டவர்க்கு இன்று அருள் புரிகின்றார் என்று சொல்லுவதற்கு இடமின்றி ஆசை கொண்டு நினைத்த பொழுதே தாமதமின்றி விரும்பியதை விரும்பியவாறு அருள் புரிவான் என்பாராய், “நினைத்த ஆங்கே பேற்றாசைக்கு அருள் புரியும் ஞான சபாபதி” என்று புகழ்கின்றார். நினைத்ததை நினைத்தவாறு பெறும் ஆசையைப் “பேற்றாசை” என்று குறிக்கின்றார்.

     (3)