5607.

     தொண்டாளப் பணந்தேடுந் துறையாள
          உலகாளச் சூழ்ந்த காமப்
     பெண்டாளத் திரிகின்ற பேய்மனத்தீர்
          நும்முயிரைப் பிடிக்க நாளைச்
     சண்டாளக் கூற்றுவரில் என்புகல்வீர்
          ஞானசபைத் தலைவன் உம்மைக்
     கொண்டாளக் கருதுமினோ ஆண்டபின்னர்
          இவ்வுலகில் குலாவு வீரே.

உரை:

     தொண்டு செய்யும் ஆட்களை வைத்துப் பணம் தேடும் வழியாகிய உலகத்தை ஆள்கின்ற காமச் சுவையை நல்கும் பெண்களை விரும்பித் திரிகின்ற பேய் மனத்தை உடையவர்களே; உங்கள் உயிரைக் கவர்வதற்குச் சண்டாளனாகிய எமன் நாளை வந்தால் அவனுக்கு என்ன சொல்வீர்கள்; ஒன்றுமில்லையாதலால் நீவிர் ஞான சபைக்குத் தலைவனாகிய சிவபெருமான் உங்களை ஆளாகக் கொள்ளுமாறு நினைந்து ஒழுகுவீர்களாக; அவனால் ஆட்கொள்ளப்பட்ட பின்பு இவ்வுலகில் அன்பும் இன்பமும் கொண்டு வாழ்வீர்களாக. எ.று.

     தொண்டாளுதல் - ஆட்களை வைத்து வேலை வாங்குதல். பணம் ஈட்டுவதே உலகியல் வாழ்வாதலால் அதனை, “பணம் தேடும் துறை” என்று பகர்கின்றார். சூழ்தல் - நினைத்தல். காம வெறி கொண்டு பெண்களின் பின்னே திரியும் மக்களை, “காமப் பெண்டாளத் திரிகின்ற பேய் மனத்தீர்” என்று பேசுகின்றார். சண்டாளக் கூற்று - சண்டாளனுடைய தன்மையை யுடைய எமன். சண்டாளன் - இரக்கமில்லாத கீழ்மகன். சிவபெருமானுக்கு மெய்ம்மைத் தொண்டனாக வாழ்வதற்கு விரும்புவீர்களாக என்பாராய், “ஞான சபைத் தலைவன் உம்மைக் கொண்டாளக் கருதுமின்” என்று கூறுகின்றார். சிவனால் ஆட்கொள்ளப்படுவீராயின் இவ்வுலகில் இன்ப வாழ்வு பெறுவீர்கள் என அறிவுறுத்தற்கு, “ஆண்ட பின்னர் இவ்வுலகில் உலாவுவீரே” என உரைக்கின்றார்.

     (4)