5609. அணங்கெழுபேர் ஓசையொடும் பறையோசை
பொங்கக்கோ ரணிகொண் டந்தோ
பிணங்கழுவி எடுத்துப்போய்ச் சுடுகின்றீர்
இனிச்சாகும் பிணங்க ளேநீர்
கணங்கழுகுண் டாலும்ஒரு பயனுண்டே
என்னபயன் கண்டீர் சுட்டே
எணங்கெழுசாம் பலைக்கண்டீர் அதுபுன்செய்
எருவுக்கும் இயலா தன்றே.
உரை: அச்சம் மிகுகின்ற பெரிய ஓசையுடன் சாப்பறையின் முழக்கங்களும் பெருகக் கோரமான கோலங் கொண்டு பிணங்களைக் கழுவி எடுத்துக்கொண்டு போய்ச் சுடுகாட்டில் வைத்து எரிக்கின்றீர்கள்; நீங்களும் இனிமேல் சாகப்போகும் பிணங்களே ஆவீர்கள்; எரிக்கும் பிணங்களை எரியாத நிலையில் கழுகுகள் கூட்டமாக இருந்து பிடுங்கித் தின்றாலும் ஒரு பயன் உண்டு; சுட்டுவிட்டால் என்ன பயன்? சுட்ட பின் எண்ணியபடிச் சாம்பலைத் தான் காண்பீர்கள்; அதுதானும் புன்செய் நிலத்துக்கும் எருவாகப் பயன்படுவதில்லை என அறிவீர்களாக. எ.று.
அணங்கு - அச்சம். கோர அணி என்பது கோரணி என வந்தது. பிணங்களைக் கழுவி எடுத்துக்கொண்டு சுடுகாடு செல்லும் நீவிர் அப்பிணங்களின் வேறல்ல; நாளை சாகப்போகும் உயிர்ப்பிணங்களாவீர்கள் என்பாராய், “இனிச் சாகும் பிணங்களே நீர்” என்று கூறுகின்றார். கணம் - கூட்டம். கழுகுகள் பிணங்களைப் பலவாய்க் கூடி இருந்தே தின்பது இயல்பாதலால், “கணங் கழுகு” என்று குறிக்கின்றார். பயன் என்பது உணவாகும் பயன். எணங்கெழு சாம்பல் - எண்ணியபடி உண்டாகும் சாம்பல். சுடுகாட்டுச் சாம்பல் புன்செய் நிலத்துக்கும் எருவாகக் கொள்ளப்படுவதில்லை என்பதுபற்றி, “அது புன்செய் எருவுக்கும் இயலாதன்றே” என்று இயம்புகின்றார். (6)
|