5610. குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டதுசுட்
டால்அதுதான் கொலையாம் என்றே
வணம்புதைக்க வேண்டும்என வாய்தடிக்கச்
சொல்கின்றேன் வார்த்தை கேட்டும்
பிணம்புதைக்கச் சம்மதியீர் பணம்புதைக்கச்
சம்மதிக்கும் பேய ரேநீர்
எணம்புதைக்கத் துயில்வார்நும் பாற்றுயிலற்
கஞ்சுவரே இழுதை யீரே.
உரை: கோழை மனத்தை உடையவர்களே! பிணமாவது குணமெல்லாம் மறைந்து உயிர்மட்டில் அடங்கியதொன்றாகும்; அதனைச் சுட்டெரித்தால் கொலைச் செயலாம் என்று நாம் சொல்லும் நல்லுரையை நல்வகையில் உள்ளத்தில் கொள்ளவேண்டும் என்று வாய் தழுதழுப்பப் பலகாலும் சொல்லுகின்றேன்; என் வார்த்தைகளைச் செவி நிறையக் கேட்டும் இறந்தவர் பிணங்களை மண்ணில் புதைக்கச் சம்மதிக்கின்றீர்கள் இல்லை; ஆனால் தேடிய பணத்தை மாத்திரம் புதைத்து மறைக்கச் சம்மதிக்கின்றீர்கள்; இதனால், மனத்தில் எழும் துன்ப நினைவுகளை மறைப்பதற்கு உறங்க விரும்பும் நன்மக்களும் உங்களிடம் தங்கி உறங்குவதற்கு அஞ்சுவார்கள் அல்லவா. எ.று.
உயிர்க்குணங்களின் சேட்டை மாத்திரம் கெட்டுத் தனித்த உயிர் மாத்திரம் அடங்கி நிற்பது பிணம் என்பது வடலூர் வள்ளலின் கருத்தாம். அதனால் பிணத்தைச் சுடுவது தீதாம் என்பது பற்றி, “அது சுட்டால் கொலையாம்” என்று கூறுகின்றார். நன்கு மனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காக, “வணம் புதைக்க வேண்டும்” என மொழிகின்றார். நல்ல வண்ணம் என்பது வணம் எனப் பொதுப்பட வந்தது. வாய் தடிக்கச் சொல்வதாவது - வாயில் உள்ள நா தழுதழுப்பத் தடிப்பேறச் சொல்வதாகும். பேயர் - பேயின் குணங்களை உடையவர். எண்ணம், எணம் என வந்தது. மனத்தில் எழும் எண்ணங்களை மறந்து அடங்குதற்குக் கொள்வது உறக்கம் என்றும், உயிர்க்குணங்கள் ஒடுங்கி அடங்குதற்குச் சாக்காடு என்றும் வேறுபடுத்திக் காட்டியவாறாம். (7)
|