5611. கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற
பேயுலகீர் கலைசோர்ந் தாரைப்
பொட்டாலும் துகிலாலும் புனைவித்துச்
சுடுகின்றீர் புதைக்க நேரீர்
சுட்டாலும் சுடுமதுகண் டுமதுடம்பு
துடியாதென் சொல்லீர் நும்மைத்
தொட்டாலும் தோஷமுறும் விட்டாலும்
கதியிலைமேல் சூழ்வீர் அன்றே.
உரை: கட்டோடும் கணத்தோடும் உலக வாழ்வின்பத்தில் மூழ்கி மகிழ்கின்ற பேயர்களே! சீவகலை இறந்தவர்களைப் பொட்டிட்டுப் புது உடையால் உடலை அலங்கரித்துச் சுடுகாட்டில் தீயிலிட்டுச் சுட்டெரிக்கின்றீர்கள் அன்றி அதனை மண்ணில் அப்படியே புதைக்க விரும்புகீன்றீர்கள் இல்லை; எரிகின்ற பிணத்தைத் தொட்டாலும் சுடுமாதலால் அதனைப் பார்த்தும் உமது உடம்பு துடிப்பதில்லை; வேறொன்றும் சொல்லவும் மாட்டீர்கள்; இனி உம்மை நாம் தொட்டாலும் குற்றமாகும்; தொடாது நீங்கினாலும் உங்களை விட வேறு கதி இல்லை; நீங்களே எண்ணிச் சொல்வீர்களாக. எ.று.
கட்டு - இனத்தவர் கூட்டுறவு. கணம் - பெருந்தன்மை. இனம் சூழப் பெருந்தன்மையுடன் வாழ்கின்ற உலக மக்களை, “கட்டாலும கனத்தாலும் களிக்கின்ற பேயுலகீர்” என்று கூறுகின்றார். இறக்கின்ற போது உயிரினுடைய சீவகலை ஒடுங்கி விடுதலால், “கலை சோர்ந்தார்” என்று உரைக்கின்றார். உடல் முழுதும் உலவி நிறைந்துள்ள உயிர்த் தன்மையை, “சீவ கலை” என்பர். செத்த பிணத்தைச் சீரிட்டழுவது உலகியல் மரபாதலின், “பொட்டாலும் துகிலாலும் புனைவித்துச் சுடுகின்றீர்” என்று புகல்கின்றார். எரியும் பிணத்தைத் தொட்ட வழிச் சுடுதலின், “சுட்டாலும் சுடும்” என்று சொல்லுகின்றார். உயிர்க் கலையின் ஓட்டம் உடற்குள் இயங்குவது சுடுவதால் தெரிகின்றமை கண்டும் உங்கள் உடம்பு துடிக்கவில்லையே என்பாராய், “சுடுவது கண்டு உமது உடம்பு துடியாது என்” என்று வினவுகின்றார். துடியாதது என் என்பது துடியாதென் என்று கேட்கின்றார். சீவ கலை இருந்தும் சேர்ப்படாமை கண்டு வருந்துவாராய், “நும்மைத் தொட்டாலும் தோஷமுறும்” என்று சொல்லுகின்றார். சூழ்தல் - நினைத்தல். (8)
|