5612. பரன்அளிக்கும் தேகம்இது சுடுவதப
ராதம்எனப் பகர்கின் றேன்நீர்
சிரம்நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள்
பற்பலரும் சித்த சாமி
உரனளிக்க எழுகின்ற திருநாள்வந்
தடுத்தனஈ துணர்ந்து நல்லோர்
வரனளிக்கப் புதைத்தநிலை காணீரோ
கண்கெட்ட மாட்டி னீரே.
உரை: பரம்பரனாகிய சிவபெருமான் அளித்தருளிய தேகமாகிய இதனைச் சுடுவது அபராதம் என நான் சொல்லுகின்றேன்; என் சொல்லைக் கேளாமல் நீங்கள் முகம் சுளிக்குமாறு நெருப்பில் சுடுகின்றீர்கள்; சித்தத்தில் எழுந்தருளும் சுவாமியாகிய சிவன் செத்தவர் பலரும் உடலுரத்துடன் மீள எழுகின்ற நன்னாட்கள் வர இருக்கின்றன என உணர்ந்து நல்லவர்கள் இறந்தவர் தேகத்தை மேன்மையுறப் புதைப்பதில்லை; குருடு பட்ட மாடு போல்கின்ற நீங்கள் கண்டதில்லையோ. எ.று.
அபராதம் - குற்றம். ஒரு பொருளை ஆக்கி அளிப்பவர்க்கே அதனை அழிக்கும் உரிமை உண்டாதலால் பரமன் அளித்த தேகத்தைச் சுட்டழிப்பது குற்றமாம் என நான் எடுத்துரைக்கின்றேன் என்பாராய், “பரன் அளிக்கும் தேகம் இது சுடுவது அபராதம் எனப் பகர்கின்றேன்” என்று கூறுகின்றார். நெருப்பின் வெம்மையால் முகம் சுளிக்கப்படுவது இயல்பாதலால், “நீர் சிரம் நெளிக்கச் சுடுகின்றீர்” என்று செப்புகின்றார். “பரன் அளிக்கும் தேகம் இது சுடுவது அபராதம் எனப் பகர்கின்றேன்” என்று கூறுகின்றார். நெருப்பின் வெம்மையால் முகம் சுளிக்கப்படுவது இயல்பாதலால், “நீர் சிரம் நெளிக்கச் சுடுகின்றீர்” என்று செப்புகின்றார். சித்தசாமி சிந்தையில் எழுந்தருளிச் செத்தவர்களின் உடலுக்கு உரமளிக்கும் தருணம் இதுவாகும் என்பாராய், “செத்தவர்கள் பற்பலரும் சித்தசாமி உரனளிக்க எழுகின்ற திருநாள்” என்று கூறுகின்றார். சாமி - தலைவன். செத்தவர் உடம்பு சாவா முன் இருந்த வலிமையோடு எழுகின்றமை விளங்க, “உரனளிக்க எழுகின்ற திருநாள்” என்கின்றார். மீள எழும் உயர்ந்த நிலையை, “வரன் அளிக்கப் புதைத்த நிலை” என்று புகல்கின்றார். கண் கெட்ட மாடு குருட்டெருது என்பர். வழி தெரியாமல் அலைகின்ற மாடு போல இருக்கீன்றீர்கள் என்பாராய், “கண் கெட்ட மாட்டினீரே” என்று கூறுகின்றார். “கண் கெட்ட ஊரேறாய் இங்கு உழல்வேனோ” என்று திருவாசகம் ஓதுவது காண்க. (9)
|