5613. புலைத்தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக்
கருங்கடலில் போக விட்டீர்
கொலைத்தொழிலில் கொடியீர்நீர் செத்தாரைச்
சுடுகின்ற கொடுமை நோக்கிக்
கலைத்தொழிலில் பெரியர்உளம் கலங்கினர்அக்
கலக்கம்எலாம் கடவுள் நீக்கித்
தலைத்தொழில்செய் சன்மார்க்கம் தலைஎடுக்கப்
புரிகுவதித் தருணம் தானே.
உரை: புண்ணியத்தைக் கரிய கடலில் போக்கிவிட்டுப் புலைத் தொழிலைச் செய்தொழுகுகின்றீர்கள்; அன்றியும் கொலைத் தொழிலாலும் நீங்கள் கொடியவர்களாக இருக்கின்றீர்கள்; செத்தவர்களைச் சுட்டழிக்கின்ற கொடுஞ்செயலைப் பார்த்தே கலையறிவில் வல்லவர்களாகிய பெரியவர்கள் உள்ளம் வருந்துகின்றார்கள்; அவ்வருத்தத்தை நீக்கிக் கடவுளாகிய சிவன் முதன்மைத் தொழிலாகிய படைத்தலைச் செய்கின்ற சன்மார்க்க நெறி தலைதூக்கி எழுமாறு செய்யும் தருணம் இதுவாகும் என அறிவீர்களாக. எ.று.
புலைத் தொழில் - புலால் உண்ணும் செய்கை. புண்ணியச் செயலைக் கைவிட்டு விட்டனர் என்பதற்கு, “கருங்கடலில் போக விட்டீர்” என்று கூறுகின்றார். கொலைத்தொழில் - கொல்லும் தொழில். கொல்வது கொடுமையாதலால், “கொடியர் நீர்” என்று குறிக்கின்றார். கலைத்தொழில் கலைஞானம் பயிறல். படைத்தல் முதலிய ஐவகைத் தொழில்களில் படைத்தல் முதன்மைத் தொழிலாதலால் அதனை, “தலைத் தொழில்” என்று உரைக்கின்றார். தலையெடுத்தல் - தலை தூக்குதல்; அஃதாவது, தொடங்குதல். (10)
|