136
136. சன்மார்க்க உலகின்
ஒருமைநிலை
அஃதாவது, சமரச சன்மார்க்க நன்னெறியை மேற்கொண்ட
பெருமக்களின் சிறப்புணர்ந்து அதற்குக் காரணமாகிய அவர்களுடைய மனவொருமையை வியந்து பாராட்டி
வாழ்த்துவதாகும்.
நேரிசை வெண்பா
5614. சித்தி புரத்தே தினந்தோறும் சீர்கொளருள்
சத்திவிழா நீடித் தழைத்தோங்க - எத்திசையில்
உள்ளவரும் வந்தே உவகை உறுகமதத்
துள்ளல் ஒழிக தொலைந்து.
உரை: சித்திபுரம் என்னும் வடலூரின்கண் நடைபெறுகின்ற சிறப்புப் பொருந்திய திருவருட்சத்தியை வியந்து எடுக்கும் திருவிழா பெருகித் தழைத்து விளங்குவதாக; எத்திசையில் உள்ள நன்மக்களும் மதச்சார்பால் உண்டாகும் மனச்செருக்கு நீங்கி விளங்குக; சித்தி புரத்துக்கு மகிழ்வுடன் வந்து விழாவைக் கண்டு இன்புறுக. எ.று.
வடலூர்க்குச் சித்திபுரம் என்னும் பெயருண்டாதலால் அதனைச் “சித்திபுரம்” என்று சிறப்பிக்கின்றார். அருட் சித்திகளைப் பெற விரும்புவோர் அவண் வந்து கூத்தப்பெருமானை வழிபட்டு எல்லாச் சித்திகளையும் பெறுவதுபற்றி அதனைச் “சித்தி புரம்” என்று கூறுகின்றார். அருட்சத்தி என்பது பார்வதிக்கும் பெயராதலால் பார்வதியை நினைந்து சித்திபுரத்தில் எடுக்கும் திருவிழாவை, “அருட் சத்திவிழா” என்று போற்றுகின்றார். மத விகற்பங்கள் மனச்செருக்கை எழுப்பிப் பூசலை உண்டாக்குதலால் அவற்றை, “மதத்துள்ளல்” என்று குறிக்கின்றார். மத வேறுபாடின்றி நாற்றிசையிலும் உள்ள நன்மக்கள் வந்திருந்து திருவிழாவைக் கண்டு இன்புறுதலால், “எத்திசையில் உள்ளவரும் வந்து உவகையுறுக” என்று வாழ்த்துகின்றார். (1)
|