5616.

          சிற்சபையும் பொற்சபையும் சித்தி விளக்கத்தால்
          நற்சகமேல் நீடூழி நண்ணிடுக - சற்சபையோர்
          போற்றிவரம் பெற்றுவகை பூரிக்க வாழ்ந்திடுக
          நாற்றிசையும் வாழ்க நயந்து.

உரை:

     அருட் சத்தி நல்கும் சித்திகளின் விளக்க மிகுதியால் நல்ல உலகின்கண் சிற்சபையும் பொற் சபையுமாகிய ஞான சபை நீடூழிக் காலம் பொருந்தி நிலைபெறுவதாக; சன்மார்க்கத்தை உடைய சங்கத்தினர் நாள்தோறும் அச்சபையைப் போற்றி வேண்டும் வரங்களைப் பெற்று இன்பம் மிகுந்து வாழ்க; அவர்களே அன்றி நான்கு திசைகளிலும் உள்ளவர்களும் ஒருவரை ஒருவர் நேசித்து வாழ்வார்களாக. எ.று.

     சிற்சபை - ஞான சபை. பொற் சபை - அதனைத் தன்கண் கொண்டிருக்கும் அழகிய சபை. நற்சகம் - நல்ல உலகம். சற்சபை - சன்மார்க்க சங்கத்தினர் கூடியிருக்கும் சபை. சபையினரை வாழ்வதோ டல்லாமல் மற்றவர்களையும் வாழ்வது அருளாளர் கடமையாதலால், “நாற்றிசையும் வாழ்க நயந்து” என்று நவில்கின்றார்.

     (3)