5617. அச்சந் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற
விச்சை அரசே விளங்கிடுக - நச்சரவம்
ஆதிக் கொடியஉயிர் அத்தனையும் போய்ஒழிக
நீதிக் கொடிவிளங்க நீண்டு.
உரை: அச்சம் சிறிதுமின்றி அருள் நெறியில் செலுத்துகின்ற ஞான அரசே உலகில் விளக்கமுறுக; நஞ்சு பொருந்திய பாம்பு முதலிய கொடிய உயிர்கள் யாவும் நீங்கி ஒழிவதாக; நீதியை விளக்கும் அருட் கொடி மிக உயர்ந்து விளங்குக. எ.று.
அச்சம் உள்ள மனத்தின்கண் அன்பும் அருளும் நிலவாவாதலால் “அச்சம் தவிர்த்து அருளிற் செலுத்துகின்ற விச்சை அரசு” என்று விதந்து மொழிகின்றார். விச்சை - ஞானம். விடம் பொருந்திய பாம்பு முதலிய கொடிய உயிர்களால் அச்சம் விளைவதுபற்றி, “நச்சரவம் ஆதிக் கொடிய உயிர் அத்தனையும் போய் ஒழிக” என்று புகல்கின்றார். ஒரு சிலவும் எஞ்சலாகாது என்பதற்காக 'அத்தனையும்' என்றும், சிறிதும் இல்லையாதல் வேண்டும் என்பதற்காக, “போய் ஒழிக” என்றும் உரைக்கின்றார். நீதிக் கொடி - அருளறம் நிறைந்து விளங்குவிக்கும் உயர் கொடி என உரைப்பதற்கு, “நீதிக் கொடி நீண்டு விளங்க” என்று வாழ்த்துகின்றார். (4)
|