5618. கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக
அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள்நயந்த
நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத்
தெல்லோரும் வாழ்க இசைந்து.
உரை: இரக்கமில்லாதவருடைய ஆட்சி விரைந்து கெடுவதாக; அருள் நிறைந்த நன்னெறியாளர்கள் ஆள்வார்களாக; அருள் ஞானம் விரும்பும் நன்மக்கள் நினைத்த நலம் பலவும் பெறுவார்களாக; அருளறமே நிறைந்து எல்லோரும் மனமொத்து வாழ்வார்களாக. எ.று.
கருணை இல்லாதவர்களுடைய ஆட்சியை, “கருணை இலா ஆட்சி” எனக் கூறுகின்றார். கருணை - இரக்கம். இரக்கமில்லாதவர்களுடைய ஆட்சி துன்பமே விளைவிக்கும் என்பதுகருதி, “கடுகி ஒழிக” என்று உரைக்கின்றார். அருள் நயந்த நன்மார்க்கர் - சமரச மனப்பான்மையையுடைய சன்மார்க்கப் பெருமக்களாவார்கள். நன்று - அருளறம். சன்மார்க்கரும் அல்லாத மார்க்கத்தவரும் அடங்க, “எல்லோரும்” என இயம்புகின்றார். (5)
|