5620. செத்தார் எழுக சிவமே பொருள்என்றே
இத்தா ரணியில் இருந்தொளிர்க - சுத்தசிவ
சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவறியாத்
துன்மார்க்கம் போக தொலைந்து.
உரை: உயிர் நீங்கி இறந்தவர்கள் யாவரும் அதனை மீளப்பெற்று எழுவார்களாக; இப்பூலவுலகில் சிவமே பரம்பொருள் என்ற கருத்தே நிலைபெற இருந்து விளங்குவதாக; சிவ பரம்பொருட்குரிய சுத்த சன்மார்க்க நெறி ஒன்றுமே தழைத்து விளங்குவதாக; அருளுணர்வு இல்லாத தீய நெறிகள் முற்றவும் கெட்டு ஒழிவதாக. எ.று.
செத்தார் மீள உயிர் பெற்று எழும்போது மாறாச் சிந்தை உடையவராதல் வேண்டும் என விரும்புவாராய், “செத்தார் எழுக” என்று எடுத்து மொழிகின்றார். தாரணி - பூவுலகம். இருந்து ஒளிர்தலாவது நிலைபெற நின்று விளங்குதல். சிவபெருமான் வகுத்த நன்மார்க்கம் என்பது விளங்க, “சுத்த சிவசன்மார்க்கம்” என்று சொல்லுகின்றார். இரக்க உணர்வே இல்லாத தீய நெறியைத் “தயவறியாத் துன்மார்க்கம்” என்று பழிக்கின்றார். (7)
|