5621.

          செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச்
          சித்தம்வைத்துச் செய்கின்ற சித்தியனே - சுத்தசிவ
          சன்மார்க்கச் சங்கத் தலைவனே நிற்போற்றும்
          என்மார்க்கம் நின்மார்க்க மே.

உரை:

     செத்தவர்கள் யாவரும் திரும்ப உயிர் பெற்று எழுந்து வருமாறு மனம் வைத்து அருளுகின்ற சிவனே! சுத்த சன்மார்க்க சங்கத்துக்குத் தலைவனே! நின்னையே போற்றி வாழ்கின்ற என்னுடைய மார்க்கமும் நினது சன்மார்க்கமேயாகும். எ.று.

     சித்தம் என்பது இங்கு மனவுணர்வைக் குறிக்கின்றது. செய்தலாவது திரும்பி வரச் செய்தல். சித்தியன் -சித்தத்தில் இருந்து எல்லாச் சித்திகளையும் செய்ய வல்லவன். சன்மார்க்க சங்கத் தலைவன் சிவனாதலால் அவனைப் போற்றிப் பரவுகின்ற என் மார்க்கமும் சன்மார்க்கமே என வற்புறுத்தற்கு, “என் மார்க்கம் நின் மார்க்கமே” என்று கூறுகின்றார்.

     (8)