5622.

          நல்லாரும் என்னை நயந்தாரும் நன்மைசொல
          வல்லாரும் என்னை வளர்த்தாரும் -எல்லாரும்
          நீஎன் றிருக்கின்றேன் நின்மலனே நீபெற்ற
          சேய்என் றிருக்கின்றேன் சேர்ந்து.

உரை:

     நல்ல பண்பும் செயலும் உடையவர்களும் என்பால் அன்பு செய்பவர்களும் எல்லார்க்கும் நல்லறமே சொல்ல வல்லவர்களும் என்னை வளர்த்தப் பெருமக்களும் யாவரும் எனக்கு நீயே ஆவாய் என்று கருதி இருக்கின்றேன்; அன்றியும் என்னை நீ பெற்ற மகன் என்றே மனதில் கொண்டிருக்கின்றேன். எ.று.

     நல்லார் -நல்ல பண்பும் செய்கையும் உடையவர். என்னுடைய குணம் செயல்களைக் கண்டு என்னை விரும்புபவர்களை, “என்னை நயந்தார்” என எடுத்தோதுகின்றார். முக்குண வயப்பட்டவர் சமயத்தில் நல்லது சொல்லா தொழிகுவராதலால், “நன்மை சொல வல்லாரும்” என இசைக்கின்றார். நின்மலன் - இயல்பாகவே மலக் கலப்பில்லாதவன்; அஃதாவது சிவன் என்பதாம். சேய் - மகன்.

     (9)