137. திருவடிப் பெருமை
அஃதாவது பசுகரணங்கள் எல்லாம் பதிகரணங்களாக மாறப் பெற்ற ஆன்மாவாகிய தலைவி நாயகனாகிய சிவனுடைய பெருமையை எடுத்துரைப்பது. நாயகன் பெருமையை அவன் திருவடி மேல் ஏற்றித் திருவடிப் பெருமை என்று செப்புகின்றார்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 5625. திருவாளர் கனகசபைத் திருநடஞ்செய் தருள்வார்
தேவர்சிகா மணிஎனக்குத் திருமாலை கொடுத்தார்
உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய்
ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த்துணைவர் அவர்தம்
பெருவாய்மைத் திறம்சிறிதும் பேசமுடி யாதே
பேசுவதார் மறைகள்எலாம் கூசுகின்ற என்றால்
துருவாமல் இங்கெனக்குக் கிடைத்ததைஎன் சொல்வேன்
சொல்அளவல் லாதசுகம் தோன்றுவதென் தோழி.
உரை: தோழி, திருவாளரும் பொற்சபையில் திருநடனம் செய்பவரும் தேவர்களுக்கு எல்லாம் முடிமணியுமாகிய சிவபெருமான் எனக்குத் திருவருளாகிய ஞானமாகிய மாலையைக் கொடுத்தருளினார்; ஆதலால் உருவாளராகிய அவர் அருவாகியும் ஒளியாகியும் ஒளி பறந்த வெளியாகியும் ஓங்கி என்னுடைய உயிர்க்குத் துணைவராய் விளங்குகின்றார்; அவருடைய பெரிய வாய்மை பொருந்திய சிறப்புக்களைச் சிறிதளவும் நம்மால் எடுத்துரைக்கவும் முடியாது; அவர் திறங்களை வேதங்கள் யாவும் ஓதுவதற்கு நிலை சுருங்குகின்றன என்றால் வேறே எடுத்துப் பேச வல்லவர் யாரிருக்கின்றார்கள்; எனினும் நுணுகி ஆராயாமல் இங்கே எனக்குத் தெரிந்ததைச் சொல்கின்றேன்; சொல்லுமிடத்து அளவுக்கும் அடங்காத இன்ப சுகம் தோன்றுகின்றது; இதனை என்னென்பது. எ.று.
திருவாளர் - அருட் செல்வத்தை ஆள்பவர். கனக சபை - பொற்சபை. பெண்மைக் கரணங்களைக் கொண்ட ஆன்ம நாயகியாகிய நிலையில் தன்னை வைத்துப் பேசுகின்றாராதலால் அவர் அருளிய அருள் ஞானத்தை மாலையாகப் புனைந்துரைக்கின்றார். உருவாளர் - அருவமும் உருவமும் அருவுருவமும் கொள்பவராதலால் சிவனை, “உருவாளர்” என உரைக்கின்றார். உயிர்க்குயிராய் இருந்து உணர்வன உணர்வித்தலால், “உயிர்த் துணைவர்” என்று உரைக்கின்றார். உண்மை நிறைந்த புகழ்க் கூறுகளைப் “பெருவாய்மைத் திறம்” என்று பேசுகின்றார். கூசுதல் - உள்ளம் சுருங்குதல். துருவுதல் - ஆராய்தல். சொல்லளவில் அடங்காதது சிவானந்தம் என்பது பற்றி, “சொல் அளவல்லாத சுகம்” என்றும், புகழை எடுத்துப் பேசுந்தோறும் உள்ளத்தில் சிவானந்தானுபவம் எய்துதலால், “தோன்றுவது என்” என்றும் தலைவி தோழியோடு உசாவுகின்றாள். (1)
|