5626. அருளாளர் பொற்பொதுவில் அற்புதநா டகஞ்செய்
ஆனந்த வண்ணர்எனை ஆளுடையார் சிறியேன்
தெருளாத பருவத்தே தெருட்டிமணம் புரிந்த
சீராளர் அவர்பெருமைத் திறத்தைஎவர் புகல்வார்
மருளாத ஆகமங்கள் மாமறைகள் எல்லாம்
மருண்டனவே என்னடிஎன் மனவாக்கின் அளவோ
இருளாமை என்றுறுமோ அன்றுசிறி துரைப்பேன்
என்னவும்நாண் ஈர்ப்பதிதற் கென்புரிவேன் தோழி.
உரை: தோழி, அருட் செல்வரும் பொற்சபையில் அற்புத நடனம் செய்கின்ற ஆனந்த மயமாய் இருக்கின்றவரும் என்னை ஆளாக உடையவருமாகிய சிவபெருமான் சிறியவளாகிய என்னைத் தெளிவில்லாத இளம் பருவத்தே தெளிவித்து அருள் ஞான மணம் புரிந்து கொண்ட சிறப்புடையவரான அவருடைய பெருமைக் கூறுகளை யாவரே எடுத்துரைப்பார்; மயக்கமில்லாத ஆகமங்களும் பெரிய வேதங்களும் யாவும் புகல்வதற்கு மயங்குகின்றனவாதலால் யான் எம்மாத்திரம்? அவர் புகழ்கள் என்னுடைய மனம் வாக்குகளுக்கு அடங்குவனவாமோ? ஞானத் தெளிவு எனக்கு எப்பொழுது எய்துமோ? அப்பொழுது சிறிது சொல்லுவேன் என எண்ணவும் என் பெண்மைக்குரிய நாணம் என்னைப் பின்னுக்கு இழுக்கின்றபடியால் யான் யாது செய்வேன். எ.று.
அருளானந்த உருவினர் என்பதற்கு “அருளாளர்” என்று கூறுகின்றார். தனது நடனத்தால் உலகுயிர்கட்கு இன்பம் விளைவிப்பது பற்றிச் சிவனை, “அற்புத நாடகம் செய் ஆனந்த வண்ணர்” என்று அறிவிக்கின்றார். தன் திருவருளை விழையும் அன்பர்களுக்கு அதனை நல்கி ஆட்கொள்ளுதல் மரபாதலின், “ஆளுடையார்” என்று சிறப்பிக்கின்றார். இளம் பருவத்தையே தமக்கு அருள் ஞான வேட்கை உண்டானமை புலப்படுத்தற்கு, “தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த சீராளர்” என்று இயம்புகின்றார். ஞான வேட்கையை உண்டு பண்ணியதைப் பெண்மைக்கேற்ப மணம் புரிந்த என்று சொல்லுகின்றார். மருளாத ஆகமங்கள் - தெளிவாக எடுத்துரைக்கின்ற சிவாகமங்கள். மருளுதல் - மயங்குதல்.இருளாமை - தெளிவுடைமை. ஞானத் தெளிவு எனக்கு எய்தும்போது நான் அவருடைய புகழ்க் கூறுகளை இயம்பலாம் என்றாலும் என் அறிவின் சிறுமை என்னைப் பின்னுக்கு இழுக்கின்றது; இதற்கு என் செய்வது என்பது கருத்து. (2)
|