5629. பதிஉடையார் கனகசபா பதிஎனும்பேர் உடையார்
பணம்பரித்த வரையர்என்னை மணம்புரிந்த கணவர்
விதியுடையார் ஏத்தநின்ற துதிஉடையார் ஞான
விளக்கனைய மெய்உடையார் வெய்யவினை அறுத்த
மதிஉடையார் தமக்கருளும் வண்கைபெரி துடையார்
மங்கைசிவ காமவல்லி மணவாளர் முடிமேல்
நதிஉடையார் அவர்பெருமை மறைக்கும்எட்டா தென்றால்
நான்உரைக்க மாட்டுவனோ நவிலாய்என் தோழி.
உரை: தோழி, திருக்கைலாயத்தைத் தமக்கு இடமாக உடையவரும், கனக சபாபதி என்னும் திருப்பெயரை உடையவரும், பொன்மயமான மேருமலையை உடைவரும், என்னை ஞான மணம் புரிந்து கொண்ட கணவரும், நல்வினையை உடைய பெருமக்கள் புகழ்ந்தோதும் துதியை உடையவரும், ஞான விளக்கு போன்ற திருமேனியை உடையவரும், கொடிய வினைகளிலிருந்து நீங்கிய ஞானம் உடையவர்களுக்கு அருள் வழங்கும் வள்ளன்மை மிக உடையவரும், மங்கையாகிய சிவகாமவல்லிக்கு மணவாளரும், தமது சடை முடிமேல் கங்கை நதியை உடையவருமாகிய சிவபெருமானுடைய பெருமை நான்கு வேதங்களுக்கும் எட்டாது என்றால் நான்எட்டி அறிந்து உரைக்க வல்லவளாவனோ? நீயே சொல்லுக. எ.று.
பதி - கைலாய மலை என்னும் திருப்பதி. “கைலாயம் தம்மிடமாக் கொண்டார் போலும்” (ஆக்கூர்) என்று திருநாவுக்கரசர் முதலிய பெரியோர்கள் கூறுவது காண்க. பணம் பரித்த வரையர் - பொன் மலையை உடையவர். பொன்னால் செய்யப்படுவது பற்றி, பொன் மலையை, “பணம் பறித்த மலை” என்று கூறுகின்றாள். விதி உடையார் - சிவனை நினைத்துத் துதித்து வணங்கும் நல்லொழுக்கம் உடையவர்களை “விதி உடையார்” என்று விளம்புகின்றார். வெவ்வினைகள் ஞானம் எய்தாதவாறு தடுத்தலால் சிவஞானிகளை, “வெய்யவினை அறுத்த மதி உடையார்” என்று பாராட்டுகின்றாள். வண்கை பெரிது உடையார், வள்ளண்மை மிக உடையவர். முடிமேல் நதி உடையார் - தமது சடை முடியில் கங்கை நதியை உடையவர். (5)
|