5630.

     வெடித்தளிந்த முக்கனியின் வடித்தரசந் தனிலே
          விரும்புறநின் றோங்கியசெங் கரும்பிரதம் கலந்து
     தடித்தசெழும் பாற்பெய்து கோற்றேன்விட் டதனைத்
          தனித்தபரா அமுதத்தில் தான்கலந்துண் டாற்போல்
     இடித்திடித்தென் உளமுழுதும் தித்திக்கும் வார்த்தை
          இனிதுரைத்து மணம்புரிந்த என்னுயிர்நா யகர்வான்
     பொடித்திருமே னியர்நடனம் புரிகின்றார் அவர்தம்
          புகழ்உரைக்க வல்லேனோ அல்லேன்காண் தோழி.

உரை:

     தோழி, முதிரக் கனிந்து வெடுத்த வாழை, பலா, மா என்ற பழங்களைப் பிழிந்து வடித்தெடுத்த சாற்றிலே யாவரும் விரும்பும்படி உயர்ந்த செங்கரும்பின் சாற்றைக் கலந்து நீர் கலவாத செழித்த பசும்பாலைப் பெய்து கொம்புத்தேனைப் பெய்து தூய மேலான அமுதத்தில் கலந்து உண்டதுபோல உன் உள்ளம் முழுதும் இனிக்கும் படியான சொற்களைப் பன்முறையும் அன்புடன் உரைத்து என்னை ஞான மணம் புரிந்துகொண்ட தலைவரான சிவபெருமான் திருநீறு அணிந்த திருமேனியுடன் ஞானசபையில் நடனம் புரிகின்றார்; அவருடைய புகழ்க்கூறுகளை எடுத்துரைக்க நான் வல்லவளாவேனோ நீயே சொல். எ.று.

     முதிர்ந்த பழம் வெடிப்பது இயல்பாதலால், “வெடித்து அளிந்த முக்கனி” என்றும், கோது நீங்கிய வடிகட்டிய சாறு என்பதற்கு, “வடித்த ரசம்” என்றும் விளங்க உரைக்கின்றார். கரும்பின் சாறு “கரும்பி ரதம்” என்று கூறப்படுகின்றது. நீர் கலவாத தூய பசம்பாலை, “தடித்த செழும்பால்” என்று சாற்றுகின்றாள். பரா அமுதம் - உயர்ந்த தேவாமுதம். இனிய சொற்களைப் பன்முறையும் சொல்வதை, “இடித்திடித்து இனிதுரைத்து” என இயம்புகின்றாள். பொடித்திருமேனியர் - வெண்பொடியாகிய திருநீற்றைத் திருமேனி முழுதும் அணிந்திருப்பவர்.

     (6)