5631. திருச்சிற்றம் பலத்தின்பத் திரு உருக்கொண் டருளாம்
திருநடஞ்செய் தருளுகின்ற திருவடிகள் இரண்டும்
அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் அறிவாய்
அவ்வறிவில் விளைந்தசிவா னந்தஅமுதாகி
உருச்சிக்கும் பரநாதத் தலங்கடந்தப் பாற்சித்
துருவுகடந் திருக்கும்என உணர்ந்தோர்சொல் வாரேல்
பெருச்சித்தெல் லாம்வல்ல நடராஜப் பெருமான்
பெருமையையாம் பேசுவதென் பேசாய்என் தோழி.
உரை: தோழி, திருச்சிற்றம்பலத்தின்கண் இன்பத் திருவுருக்கொண்டு திருவருள் இயக்கமாகிய திருநடனத்தைச் செய்தருளுகின்ற திருவடிகள் இரண்டையும் அன்புடன் அர்ச்சனை புரியும் பேரன்பர்களின் அறிவின்கண் அறிவாய் அந்த உள்ளறிவின்கண் தோன்றுகின்ற சிவானந்த அமுதமாய் இனிக்கின்ற பரநாதமாகிய எல்லையைக் கடந்து அதற்கப்பால் ஞானாகாசமாய் உருவு கடந்து ஒளிர்வது என மெய்யுணர்ந்தோர் சொல்வார்களாயின் பெரிய சித்துக்கள் எல்லாவற்றையும் செய்ய வல்லவராகிய கூத்த பெருமானுடைய பெருமையை நம்மால் எவ்வாறு எடுத்தோத இயலும்; நீயே சொல்லுக. எ.று.
சிவவுருக் கொண்டு விளங்குதலின் அதனை, “இன்பத் திருவுரு” என்று சிறப்பிக்கின்றார். கூத்தப் பெருமானுடைய திருக்கூத்து அருட் சத்தி இயக்கமாக நிகழ்வதாதலின் அதனை, “அருளாம் திருநடம்” என்று புகழ்கின்றாள். அருச்சனை செய்தல் என்பது அருச்சித்தல் என வந்தது. அறிவினுள் அறிவாய் நிற்றலும் அவ்வறிவினுள் ஆனந்தத்தைப் பெருக்குவதும் சிவத்து இயல்பாதலின், “அறிவின்கண் அறிவாய்” என்றும், “அறிவினுள் ஆனந்த அமுதமாகி” என்றும் கூறுகின்றாள். ருசிக்கு என்பது உருச்சிக்கும் என வந்தது. சுத்த தத்துவ நாத எல்லைக்கு மேல் விளங்குவது பரநாதம் என்பது பற்றி அதனை, “பரநாதத் தலம்” எனவும், அதற்கு மேலதாகிய சிதாகாசத்தில் ஞானத் திருவுருவின்றி அருவமாய்ச் சிவம் திகழ்வதால் அதனை, “அப்பால் சித்துருவு கடந்திருக்கும்” என்றும், மெய்யுணர்ந்தோர் கூறுவது பற்றி, “உணர்ந்தோர் சொல்வாரேல்” என்றும் தலைவி உரைக்கின்றாள். பெருஞ் சித்து என்பது மக்களினத்துப் பெரிய யோகியர்களாலும் செய்தற்கரிய அறிவுச் செயல்கள். மெய்யுணர்த்த பெரியவர்களும் இறைவனுடைய திருவடிகள் இரண்டையும் உணர்ந்துரைப்பது அரிது என்றால் யான் எனது பெண்ணறிவு கொண்டு எவ்வாறு எடுத்துரைப்பேன் என்பதாம். (7)
|