5633. பரைஇருந்த வெளிமுழுதும் பரவிஅப்பால் பரையின்
பரமாகி அப்பரத்தில் பரம்பரமாய் விளங்கித்
திரைகடந்த திருவெளியில் ஆனந்தா தீதத்
திருநடஞ்செய் யாதுசெயும் திருவடிகள் என்றே
புரைகடந்தோர் புகல்கின்றார் கேட்கின்றோம் என்றால்
புண்ணியர்என் தனித்தலைவர் புனிதநட ராஜர்
வரைகடந்த திருத்தோள்மேல் திருநீற்றர் அவர்தம்
வாய்மைசொல வல்லேனோ அல்லேன்காண் தோழி.
உரை: தோழி! பரையென்று கூறப்படும் சிவசத்தி இருக்கின்ற வெளியிலும் அதற்கப்பால் நிலவும் பரவெளிக்கு அப்பாலுள்ள பரம்பர வெளியில் துலக்கமுற்று அறிய ஒட்டாது மறைக்கும் திரோதான எல்லை கடந்து அதற்கப்பால் விளங்கும் ஞானவெளியில் ஆனந்தாதீதத் திருக்கூத்தினைச் செய்யாது செய்வன இறைவன் திருவடிகள் என்று குற்றத்தின் நீங்கிய தத்துவ ஞானிகள் உரைப்பதை நாம் காதாரக் கேட்கின்றோம்; என்றாலும் புண்ணியமூர்த்தியும் எனக்கு ஒப்பற்ற தலைவருமாகிய தூய நடராசப் பெருமான் மலைபோன்ற தமது அழகிய தோள்களில் திருநீறு அணிந்து விளங்குகின்றாராகலின் அவருடைய புகழ் நலத்தை நான் எடுத்துச் சொல்ல இயலுமோ? இயலாது காண்க. எ.று.
சிவத்தோடு பிரிவின்றி உறையும் பரையாகிய சிவசத்தி விளங்குமிடம் என்பது விளங்க, “பரை இருந்த வெளி” என்று கூறுகின்றாள். அவ்வெளிக்கு மேலும் பரவெளியும் பரம்பர வெளியும் உள்ளன என்பது புலப்பட, “பரையில் பரமாகி அப்பரத்தின் பரம்பரமாய் விளங்கி” என்று உரைக்கின்றாள். அந்த நுண்ணிய பரம்பர வெளியையும் ஆன்ம சிற்சத்தி காணவொட்டாது திரோதான நிலை என்று இருப்பது தோன்ற, “திரை கடந்த” என ஓதுகின்றாள். திரோதான வெளிக்கு மேலே விளங்குவது தோன்ற, “ஆனந்தாதீதத் திருநடனம்” என்றும், அது ஆன்ம ஞான எல்லைக்குப் புலப்படாமல் நிகழ்வது பற்றி, “திருநடம் செய்யாது செய்யும் திருவடிகள்” என்றும் இயம்புகின்றாள். புரை - குற்றம். குற்றமே இல்லாத சிவஞானிகளைப் “புரை கடந்தோர்” எனப் புகல்கின்றாள். நின்மலனாதலின் கூத்தப்பெருமானை, “புனித நடராசர்” என்று போற்றுகின்றாள். வரை கடந்த திருத்தோள் - மலை போல் உயர்ந்த அழகிய தோள்கள். இதனால், பராகாசத்துக்கு மேல் பரம்பராகாசமும் அதனைச் சூழ்ந்து திரோதான வெளியும் அதற்கப்பால் ஆனந்தாதீதச் சிவ வெளியும் உள்ளன என்றும் அங்கே சிவநடனம் செய்யாது செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது, ஆன்ம சிற்சத்தியை மறைக்கும் இயல்புடைய திரோதான வெளி அருட் சத்தியின் கூறாதலின் அதனைத் திரையெனச் சுட்டிக்காட்டி அதற்க்பால் உள்ளது ஆனந்தாதீதப் பரசிவவெளி எனத் தெரிவித்தவாறாம். (9)
|