5635. கலைக்கடலைக் கடந்தமுனிக் கணங்களும்மும் மலமாம்
கரிசகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டா
தலைக்கடலில் துரும்பாகி அலைகின்றார் மன்றுள்
ஆடுகின்றார் என்பதலால் அவர்வண்ணம் அதுவும்
நிலைக்குரிய திருச்சபையின் வண்ணமும்அச் சபைக்கண்
நிருத்தத்தின் வண்ணமும்இந் நீர்மையன என்றே
மலைக்குநிறை கண்டாலும் காணவொணா தம்ம
வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும்பயன்என் தோழி.
உரை: தோழி! கலைஞான நூல்களாகிய கடலை முற்ற உணர்ந்த முனிவர்களின் கூட்டமும் மும்மலங்களாகிய குற்றங்களின் நீங்கிய யோகியர்களும் கண்டு உணர மாட்டாமல் அலை நிறைந்த கடலில் மிதக்கின்ற துரும்பு போல் அலைகின்றார்கள்; அங்ஙனமாக சிவபெருமான் அம்பலத்தில் ஆடல் புரிகின்றான் என்று சொல்லுவது ஒழிய அவருடைய இயல்புகளையும் அவர் ஆடல் புரிகின்ற நிலைத்த ஞான சபையின் இயல்புகளையும் அச்சபையின்கண் நிகழ்கின்ற திருக்கூத்தின் இயல்புகளும் இத்தகையன என்று மலைகளை எடையிட்டுக் கண்டாலும் காணலாம் இயல்பு காண முடியாது என்று வாயால் பொருளில்லாத வார்த்தைகளால் பெரிது எடுத்துப் பேசுவதால் ஒரு பயனும் இல்லை காண். எ.று.
மிகப் பரந்து விரிந்த இயல்பினவாதலால் கலைஞான நூல்களை, “கலைக் கடல்” என்று கூறுகின்றாள். முனிக்கணம் - முனிவர்களின் கூட்டம். கரிசு - குற்றம். அலைகடல் எனற்பாலது எதுகை நோக்கி அலைக்கடல் என வந்தது. மன்று - ஞான சபை. என்றும் உள்ள சபையாதலின் அதனை, “நிலைக்குரிய திருச்சபை” என்று சிறப்பிக்கின்றாள். சபையின்கண் நிகழும் ஞானத் திருக்கூத்தின் இயல்பை அறிவது எளிதன்று என்பதற்கு, “மலைகளுக்கு நிறை கண்டாலும் காணவொணாது அம்ம” என்று உரைக்கின்றாள். நிறை - நிறுத்துரைக்கும் அளவு. வாயால் பேசப்படும் வீண் வார்த்தைகளைப் பேசுவதை, “வாய்ப்பதர்கள் தூற்றுவது” என்று இயம்புகின்றாள். மலைகளுக்கு நிறை கண்டு எடுத்துரைத்தாலும் உரைக்கலாம் இறைவனுடைய சிறப்பியல்புகளை உரைக்க முடியாது; உரைப்பதும் வாய்ப்பதர்களைத் தூற்றுவதாம் என்று கூறுகின்றார். (11)
|