5636.

     சிதமலரோ சுகமலரும் பரிமளிக்க ஓங்கும்
          திருச்சிற்றம் பலநடுவே திருநடனம் புரியும்
     பதமலரோ பதமலரில் பாதுகையோ அவையில்
          படிந்ததிருப் பொடியோஅப் பொடிபடிந்த படியோ
     இதமலரும் அப்படிமேல் இருந்தவரோ அவர்பேர்
          இசைத்தவரும் கேட்டவரும் இலங்குமுத்தர் என்றால்
     நிதமலரும் நடராஜப் பெருமான்என் கணவர்
          நிலைஉரைக்க வல்லார்ஆர் நிகழ்த்தாய்என் தோழி.

உரை:

     தோழி! சித்தமாகிய தாமரையோ! ஞான சுகம் எங்கும் மணம் கமழுமாறு உயர்ந்தோங்கும் திருச்சிற்றம்பலத்தின் நடுவிலே திருக்கூத்து ஆடும் இறைவனுடைய திருவடியாகிய தாமரையோ? அத்திருவடியில் அணிந்து விளங்கும் பாதுகையாகிய மலரோ? அதன்கண் பணிந்திருக்கும் பொடியோ? பொடியில் அமைந்த உருவமோ? நலம் பயக்கும் அவ்வுருவின் மேல் அமைந்தருளும் அவனுடைய திருப்பெயரை, வாயால் சொன்னவர்களும் காதால் கேட்டவர்களும் விளங்குகின்ற சீவன் முத்தராவார்கள் என்றால் எப்பொழுதும் மணம் கமழும் நடராசப் பெருமானாகிய என் கணவருடைய இயல்புகளை எடுத்துரைக்க வல்லவர் யார் என்று சொல்வாயாக. எ.று.

     சித்தமாகிய மலர் என்பது சிதமலர் என வந்தது. சீதமலர் என்பது சிதமலர் என வந்தது என்று கொண்டு குளிர்ந்த மலர் எனப் பொருள் கூறுவதுண்டு. சுகம் மலர்தல் - ஞானானந்தம் எழுந்து பரவுதல். பதமலர் - திருவடியாகிய தாமரை. பாதுகை - பாத அணி; செருப்பு என்றலும் ஒன்று. பொடி - தூசு படிந்த நிலையைப் “பொடிபடிந்தபடி” என்று எடுத்துரைக்கின்றாள். இதம் மலர்தல் - இன்பம் உண்டாதல். பாகையிற் படிந்த பொடியும் அப்பொடியின் அமைதியும் இன்பம் தருவன என்பாளாய், “இதமலரும் அப்படி” என்று இசைக்கின்றாள். முத்தர் - சீவன் முத்தர். என்றுமுள்ள பெருமான் என்பதற்கு, “நிதம் மலரும் நடராசப் பெருமான்” என்கின்றாள். நடராசப்பெருமான் திருப்புழைச் சொன்னவரும் கேட்டவரும் சீவன் முத்தராவார்கள் என்று தெரிவித்தவாறாம்.

     (12)