5637. சுத்தமுற்ற ஐம்பூத வெளிகரண வெளிமேல்
துலங்குவெளி துரியவெளி சுகவெளியே முதலாம்
இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம்
இயற்றுவெளி என்கின்றார் என்றால்அவ் வெளியில்
நித்தபரி பூரணமாய் ஆனந்த மயமாய்
நிருத்தம்இடும் எம்பெருமான் நிபுணநட ராயர்
சித்துருவாம் திருவடியின் உண்மைவண்ணம் அறிந்து
செப்புவதார் என்வசமோ செப்பாய்என் தோழி.
உரை: தோழி! ஞானத்தால் தூயவாகிய ஐம்பூதங்களும் நிலவுகின்ற வெளியோ? மனம் முதலிய கரணங்கள் நிலவும் கரண வெளியோ? அவற்றிற்கு மேலாய் விளங்குகின்ற துரிய வெளியோ? அத்துரிய நிலையில் தோன்றும் இன்ப வெளியோ? இவை முதலாகிய வெளிகளில் சிவபெருமான் திருக்கூத்தாடுகின்ற வெளி எவ்வெளியோ? என்று அறிஞர் மலைக்கின்றார்கள்; அவர் ஆடுகின்ற திருவெளியில் நிலைத்த பரிபூரண ஆனந்த மயமாய்த் திருக்கூத்தாடும் எம்பெருமானாகிய நிபுண நடராசப் பெருமானுடைய ஞானத் திருவுருவாகிய திருவடியின் உண்மை இயல்பை அறிந்து சொல்ல வல்லவர்கள் யாவர்? என்னால் இயலுமோ? நீயே சொல். எ.று.
ஞான நெறியில் சென்று தூய்மையுற்ற நிலம் முதலிய ஐவகைப் பூதங்களையும், “சுத்தமுற்ற ஐம்பூத வெளி” என்று அறிவிக்கின்றார். இவ்வைம்பூத பரிணாமமே கண் காது முதலிய கருவிகள் அடங்க, “ஐம்பூதம்” என எடுத்து மொழிகின்றார். தூல தேகத்துள் சூக்குமமாய் நிலவும் மனம், சித்தம், அகங்காரம், புத்தி என்று கரணங்கள் அமைந்த வெளி “கரண வெளி” என வெளிப்படுகின்றது. சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம் என ஆன்ம நிலைகள் இருக்கின்ற வெளியை, “துரிய வெளி” என்று சொல்லுகின்றார். துரியத்திற்கு மேலாகிய அதீதத்தில் விளங்கும் இன்ப வெளியை, “சுகவெளி” என்று சொல்லுகின்றார். ஆன்ம தேகத்துள் இருந்து சிவபெருமான் திருநடனம் புரிகின்றார் என்பது பற்றி, “இத்தகைய வெளிகள் உள்ளே எவ்வெளியோ நடனம் இயற்று வெளி” என்று பகுத்து ஆராய்ந்து மயங்குகின்றார்கள் என்பது கருத்து. நடனம் இயற்று வெளி யாதோ அதன்கண் எழுந்தருளும் திருக்கூத்தாடும் கூத்தப் பெருமானை, “நித்த பரிபூரணமாய் ஆனந்த மயமாய் நிருத்தமிடும் எம்பெருமான். ஞான மயமாகிய திருவடி என்பதுபற்றி, “சித்துருவாம் திருவடி” என்கின்றாள். ஞானமயமான திருவடி - பூதவெளி முதலிய வெளிகளில் எம்பெருமான் நடனமிடும் வெளி. இன்னதென விளங்காதொழியினும் அவர் நின்று ஆடுகின்ற வெளியில் நித்த பரிபூரணமாய் ஆனந்தமயமாய் விளங்குகின்றார் என்பது கருத்து. (13)
|