5640.

     தோன்றுசத்தி பலகோடி அளவுசொல ஒண்ணாத்
          தோற்றுசத்தி பலகோடித் தொகைஉரைக்க முடியா
     சான்றுலகம் தோற்றுவிக்கும் சத்திபல கோடி
          தனைவிளம்பல் ஆகாஅச் சத்திகளைக் கூட்டி
     ஏன்றவகை விடுக்கின்ற சத்திபல கோடி
          இத்தனைக்கும் அதிகாரி என்கணவா என்றால்
     ஆன்றமணி மன்றில்இன்ப வடிவாகி நடிக்கும்
          அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி.

உரை:

     தோழி! பிராசாத யோகத்தால் காணப்படுகின்ற ஆரணி முதலிய சத்திகள் பல கோடியாகும்; அளந்து காண முடியாத சத்திகள் பலவற்றைத் தோற்றுவிக்கின்ற சிவசத்திகள் பல கோடியாகும்; இத்துணை என்று தொகுத்துச் சொல்ல முடியாதமைந்த உலகங்கள் பலவற்றைத் தோற்றுவிக்கும் சத்திகள் பல கோடியாகும்; அவற்றை வகுத்துக் கூற முடியாது; அச்சத்திகளைத் தொகுத்துப் பொருந்திய வகையறிந்து கட்டுப்படுத்தி இயங்க விடுகின்ற இயக்கச் சத்திகள் எண்ணிறந்தனவாகும்; அவை அனைத்திற்கும் சத்திமானாக விளங்குபவர் என் கணவராகிய சிவபெருமான் என்றால் அவர் பெருமையை யாவரே எடுத்துரைக்க வல்லவராவர்; அவர் அழகமைந்த அம்பலத்தின்கண் இன்ப வடிவாய் நடித்தருளுகின்றார்; இதனை நீ அறிவாயாக. எ.று.

     பிராசாத யோகத்தில் ஈசான முதல் சத்தியோ சாதம் ஈறாகிய பஞ்ச சத்திகளாய் அவற்றை அடுத்து ஆரணி, இரோத, இத்தினி, சனனி என்பன விளங்கித் தோன்றுவதால் அவற்றை, “தோன்று சத்தி” என்று கூறுகின்றார். தோற்றுவிக்கும் சத்திகள் ஈசானி, பூரணி, ஆர்த்தி, வாமை, மூர்த்தி என ஐந்தாயும், ஒவ்வொன்றும் முறையே ஐந்தும் நான்கும் எட்டும் பதின்மூன்றும் எட்டுமாக முப்பத்தெட்டாய் வகைப்பட்டு அட்டத்திரம் சத்கலை எனப்படும். இவற்றின் வியாபரிக்கும் திறம் அளவிறந்தனவாதலால் அவற்றை, “அளவு சொல ஒண்ணாத் தோற்று சத்தி பல கோடி” என்று சொல்லுகின்றார். உலகம் தோற்றுவிக்கும் சத்திகள் நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, அதீதை என வகைப்பட்டுப் பல கோடியாய் விரிதலால் அவற்றை, “உலகம் தோற்றுவிக்கும் சத்தி பலகோடி” என்று கூறுகின்றார். இவற்றை ஒடுக்குவதும் விடுப்பதும் ஆகிய சத்திகள் வாமை, சேட்டை, இரௌத்திரி, காளி, கலவி கரணி, பலவிகரணி, பலப்பிரம தனி சர்வ பூத தமனி முதலிய பலவாகும். இவற்றை இயக்கும் அதிகாரம் சிவன்பால் இருத்தலால், “இத்தனைக்கும் அதிகாரி என் கணவர்” என்று சொல்லுகின்றாள். இதனால், சத்திகள் எண்ணிறந்தவற்றுக்கு அதிகாரியாக விளங்குபவர் அம்பலத்தில் கூத்தாடும் சிவபெருமான் என உரைத்தவாறாம்.

     (16)