5641.

     தோற்றம்ஒன்றே வடிவொன்று வண்ணம்ஒன்று விளங்கும்
          சோதிஒன்று மற்றதனில் துலங்கும்இயல் ஒன்று
     ஆற்றஅதில் பரமாய அணுஒன்று பகுதி
          அதுஒன்று பகுதிக்குள் அமைந்தகரு ஒன்று
     ஏற்றமிக்க அக்கருவுள் சத்திஒன்று சத்திக்
          கிறைஒன்றாம் இத்தனைக்கும் என்கணவர் அல்லால்
     ஆற்றமற்றோர் அதிகாரி இல்லையடி மன்றில்
          ஆடும்அவர் பெருந்தகைமை யார்உரைப்பார் தோழி.

உரை:

     தோழி! பொருள்கட்குத் தோற்றமும் வடிவம் வண்ணமும் அதனிடத்து ஒளிரும் சோதியும் அலன்கண் விளங்குகின்ற பொருளியல்பும் ஒன்றே; அதன்கண் அமைந்து சிறப்பாய் விளங்குவது அணுவாகிய ஒன்று; அந்த அணு இருக்கும் மூலப்பிரகிருதி ஒன்று; அதற்குள் இருக்கும் கருப் பொருள் ஒன்று; ஏற்றமுடைய அக்கருவுக்குள் நிறைந்திருப்பது ஒன்றாகிய சத்தி; அந்தச் சத்திக்குத் தலைவர் என் கணவராகிய சிவபெருமான் என்றால் அவர்க்குமேல் ஆற்றல் மிக்க அதிகாரி வேறு இல்லை; அம்பலத்தில் ஆடுகின்ற அவருடைய பெருந்தகைமையை அறிந்துரைக்க வல்லவர் யார்? ஒருவரும் இல்லை என அறிவாயாக. எ.று.

     வண்ணம் - இயல்பு. நிறமுமாம். பொருளியல் பொருளாம் தன்மை இல்வழித் தோற்றம் வடிவு வண்ணம் ஒளி ஆகிய பண்புகள் அமைதற்கு இடம் இல்லையாம் என அறிக. இத்தன்மைக்கு உருவாய் அமைவது அணுத் தன்மையாதலின், “பரமாய அணு” என்று பகர்கின்றார். அந்த அணுவின் ஆக்கத்திற்கு முதற் காரணமாவது மூலப்பிரகிருதியாதலால் அதனை, “பகுதியது ஒன்று” என்று இயம்புகின்றார். மூலப்பிரகிருதியைப் பகுதி என்பது வழக்கம். மூலப்பகுதியின்கண் கருப்பொருளும் அதனுள் சத்தியும் ஒடுங்கி இருத்தலால், “கரு ஒன்று அக்கருவுள் சத்தி ஒன்று” என்று சாற்றுகின்றார். ஆற்றல் மிக்க அதிகாரி என்பவள் ஆற்ற மற்றோர் அதிகாரி என்று அறிவிக்கின்றாள். இதனால், தோற்றம் வடிவு முதலிய பண்புகளை உடைய அணு என்றும், அதனுள் கருப்பொருளும் சத்தியும் சத்திமானாகிய சிவனும் இருக்கும் தன்மை கூறியவாறாம்.

     (17)