5642.

     ஒருமைபெறு தோற்றம்ஒன்று தத்துவம்பல் வேறு
          ஒன்றின்இயல் ஒன்றிடத்தே உற்றிலஇங் கிவற்றை
     இருமையினும் மும்மைமுதல் எழுமையினும் கூட்டி
          இலங்கியசிற் சத்திநடு இரண்டொன்றென்னாத
     பெருமைபெற்று விளங்கஅதின் நடுஅருள்நின் றிலங்கப்
          பெரியஅருள் நடுநின்று துரியநடம் புரியும்
     அருமைஎவர் கண்டுகொள்வர் அவர்பெருமை அவரே
          அறியாரே என்னடிநீ அறைந்தவண்ணம் தோழி.

உரை:

     தோழி! பொருட்களுக்கு ஒன்றாகிய தோற்றம் ஒன்று எனினும் அதனுள் இயங்கும் தத்துவங்கள் பல்வேறு வகையினவாகும்; அவற்றுள் ஒன்றின் இயல்பு ஒன்றின்கண் இருப்பதில்லை; இவற்றைத் தோற்றம் தத்துவம் என்ற இரண்டினும் மூன்று முதல் ஏழு வரையில் கூட்டி விளங்குகின்ற சிற்சத்தி அதன் நடுவே இருந்து இரண்டும் ஒன்று என்னாதபடிக் கலந்து பெருமையுடன் விளங்குகிறது; அச்சிற்சத்தியின் நடுவே திருவருள் நின்று விளங்க அப்பெரிய திருவருளின் நடுவே இருந்துகொண்டு துரிய நடம் புரிகின்ற இறைவனது அருமையை யாவரே கண்டறிவார்கள்; அவருடைய பெருமையை அவரே அறியாராதலால் நீ சொன்ன தன்மையை யாதென்பது. எ.று.

     பொருளின் தோற்றம் ஒன்றாயினும் அதன்கண் அமைந்துள்ள தத்துவங்கள் பலவாகும்; அவற்றின் ஒன்றின் இயல் ஒன்றின்கண் இல்லாதவாறு மூன்று முதல் ஏழு தத்துவங்கள் அமையக் கூட்டி விளங்குகின்றது சிற்சத்தி; அதன் நடுவே சத்தியும் தத்துவமும் இரண்டும் ஒன்று என்னாதபடிக் கலந்து விளங்குவது சிற்சத்தியின் சிறப்பு என்பதற்கு, “சிற்சத்தி நடு இரண்டு ஒன்று என்னாதவாறு பெருமை பெற்று விளங்க” என்று கூறுகின்றார். பெரிய அருள் என்பது பெருமை பொருந்திய அருட் சத்தி என்பதாம். துரிய நடம் ஞான நடம். பொருள்களின் நடுவே இரண்டும் ஒன்று என்னாதபடி நடுவே நின்று சத்திமானாகிய சிவன் துரிய நடம் புரிகின்றான் என்பது கருத்து.

     (18)