5643. படைத்தபடைப் பொன்றதிலே பரம்அதிற்கா ரணமாம்
பகுதிஅதில் பகுக்கின்ற பணிகள்பல பலவாம்
புடைத்தஅவை புகுந்துலவும் புரம்ஒன்றப் புரத்தில்
பூபதிஒன் றவர்க்குணர்த்தும் பூரணசித் தொன்று
மிடைத்தஇவை எல்லாஞ்சிற் றம்பலத்தே நடிக்கும்
மென்பதத்தோர் சிற்றிடத்து விளங்கிநிலை பெறவே
அடைத்துமற்றிங் கிவைக்கெல்லாம் அப்புறத்தே நிற்பார்
அவர்பெருமை எவர்அறிவார் அறியாய்நீ தோழி.
உரை: தோழி! படைக்கபட்ட பொருள் ஒன்றெனினும் அதில் மேலாய் இருப்பது முதற் காரணமாகிய மூலப் பகுதி; அதன்கண் பகுத்துரைக்கப்படுகின்ற செயல்கள் மிகப் பலவாம்; இவ்வாறு பெருகிய அவை ஒடுங்கி யிருக்கும் இடம் ஒன்றாகும்; அவ்விடத்தே நிற்கின்ற தலைமைப் பொருள் ஒன்று; அதற்கு அறிவு நல்கும் பூரண சித்துப் பொருள் ஒன்று; இவை யாவும் சிற்றம்பலத்தில் நடிக்கின்ற சிவனுடைய மெல்லிய திருவடியின் சிறிய ஓர் இடத்தே அமைந்து நிலைபெறுமாறு நிறுத்தி இவற்றிற்கு எல்லாம் அப்புறத்தே சிவபெருமான் எழுந்தருளுவர்; அவருடைய பெருமையை யாவர் அறிய முடியும்; ஆதலால் நீ அறிகின்றாய் இல்லை. எ.று.
பரம் - மேலாய கூறு. பகுதி -மூலப் பகுதிக்கண் படைக்கப்பட்ட பொருளின் செயல் பலவும் அடங்கி இருக்கின்றன என்பாளாய், “அதில் பகுக்கின்ற பணிகள் பலபலவாம்” என்று கூறுகின்றாள். புடைத்தல் - பெருகுதல். புரம் - இருக்குமிடம். பூபதி என்றது அதன்கண் ஒடுங்கியிருக்கும் தலைமைப் பொருள்; அஃது அசேதனமாதலால் அதற்குச் செயல் வகையினை இயக்கும் சித்துருவாகிய சத்தி ஒன்று உளது என்பாளாய், “அப்புரத்தில் பூபதி ஒன்று அவர்க்கு உணர்த்தும் பூரண சித்து ஒன்று” என்று புகல்கின்றாள். மிடைதல் - நெருங்குதல். இவை யாவும் சிவனது திருப்பாதத்தில் ஒரு சிறிய கூற்றில் ஒடுங்கி நிலை நிற்க இவற்றோடு கலவாது வேறே பரம்பொருள் வீற்றிருக்கின்றது என்பாளாய், “மென்பதத்து ஓர் சிற்றிடத்து விளங்கி நிலைபெற இவைக் கெல்லாம் அப்புரத்தே பரமன் நிற்கின்றார்” என உரைத்தவாறாம். (19)
|