5644.

     சிருட்டிஒன்று சிற்றணுவில் சிறிததனில் சிறிது
          சினைத்தகர ணக்கருஅச் சினைக்கருவில் சிறிது
     வெருட்டியமான் அம்மானில் சிறிதுமதி மதியின்
          மிகச்சிறிது காட்டுகின்ற வியன்சுடர்ஒன் றதனில்
     தெருட்டுகின்ற சத்திமிகச் சிறிததனில் கோடித்
          திறத்தினில்ஓர் சிறிதாகும் திருச்சிற்றம் பலத்தே
     அருட்டிறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர்
          அருட்பெருமை எவர்உரைப்பார் அறியாய்என் தோழி.

உரை:

     தோழி! பரமனால் படைக்கப்படுகின்ற நுண்ணுடம்போடு கூடிய உயிரணு ஒன்றாகும்; அது சிறிதாகிய அணுவிலும் சிறியது; அவ்வணுவிலும் சிறியது உடற்குள் பொருந்திய மனம் முதலிய கரணத்தின் கரு; அக்கரணக் கருவிற்குச் சிறிதாய் இருப்பது மான் என்னும் தத்துவமாகும்; அதற்குள் சிறிதாய் ஒடுங்கி இருப்பது அறிவு: அவ்வறிவுக்குள் சிறிதாய் ஒடுங்கி இருப்பது நெறி காட்டுகின்ற அழகிய சுடராகிய ஒன்றாகும்; அதன்கண் ஒளியை விளக்கமுறுத்துகின்ற அருட் சத்தி மிகச் சிறியதாகும்: அதன் ஒரு கோடி அளவில் சிறிதாக விளங்குவது திருச்சிற்றம்பலத்தில் அருள் நெறியில் நடித்தருளுகின்ற சிவமாகும்! அதனுடைய அருட் பெருமையை யாவரால் உரைக்க முடியும்; அதனை நீ அறிவாய் போலும். எ.று.

     படைக்கின்ற பரம்பொருளுக்குச் சங்கற்ப சிருட்டி, கரண சிருட்டி என்ற இரண்டனுள் கரண சிருட்டி வேண்டாமையின் சங்கற்ப சிருட்டியை, “சிருட்டி ஒன்று” எனப் பொதுப்பட விதந்து கூறுகின்றாள். சிறிதாகிய உயிரணுவுள் மனம் முதலிய கரணங்களின் கருப்பொருள் ஒடுங்கி இருப்பது விளங்க, “சிற்றணுவில் சிறிது சினைத்த கரணக் கரு” என்று தெரிவிக்கின்றார். அக்கரணக் கருவில் இருந்து எண்ணங்கள் எழுதலால் அதனை, “சினைத்த கரணக் கரு” என்று செப்புகின்றாள். அக்கருவின் உள்ளீடாய் இருந்து இயக்குவது மான் என்னும் மூலப் பகுதியாதலால் அதனை, “சினைக் கருவில் சிறிது மான்” என்று மொழிகின்றாள். உடம்பினுள் இருந்து மயக்குவதும் அதற்கு இயல்பாதலால் அதனை, “வெருட்டிய மான்” என்று விளம்புகின்றாள். அம்மான் என்னும் மூலப்பகுதியில் அவ்வியத்தமாய் ஒடுங்கி இருப்பது அறிவு என்பது தோன்ற, “அம்மானில் சிறிது மதி” என்று கூறுகின்றாள். அம்மதிக்குள் அமைந்து அறிவுக்கு நினைவு தோற்றுவிக்கின்ற ஒளி ஒன்று உண்மை புலப்பட, “மதியின் மிகச் சிறிது காட்டுகின்ற வியன்சுடர் ஒன்று” என்று கூறுகின்றாள். அச்சுடருக்குள் சுடராய்த் தெளிவிக்கின்ற சிவசத்தி மிகச் சிறியதாய் விளங்குதலால் அதனை, “அதனில் தெருட்டுகின்ற சத்தி மிகச் சிறிது” என்று தெரிவிக்கின்றாள். அச்சத்தியைக் கோடிக் கணக்கில் கூறு செய்தால் அக்கூற்று ஒன்றின்கண் உளதாகும் சிவம் அவ்வொரு கூற்றினும் மிகச் சிறிது என்பாளாய், “கோடித் திறத்தினில் ஓர் சிறிதாகும் திருச்சிற்றம்பலத்தே நடிக்கின்ற என்னுடைய தலைவர்” என்று தலைவி இயம்புகின்றாள். இது வள்ளலாருடைய யோகாந்த ஞானானுபவமாதலால் வேறு விளக்கம் கூறுதற்கு வழி இல்லை என அறிக. அனாதி - முத்த சித்துருவாகிய பரம்பொருள். கரணக் கரு - மான் என்னும் மூலப்பகுதி. மானில் ஒடுங்கிய ஆன்ம சிற்சத்தி அதனுள் ஒடுங்கிய ஞான ஒளி, சிவசத்தி, சிவம் யாவும் ஒன்றுக்கொன்று நுண்ணிதாய் ஒடுங்குதல் இறைவனுடைய அருள் திறம் என உரைத்தவாறாம்.

     (20)