5646. மண்அனந்தங் கோடிஅள வுடையதுநீர் அதனில்
வயங்கியநூற் றொருகோடி மேல்அதிகம் வன்னி
எண்ணியஆ யிரம்அயுதம் கோடியின்மேல் இலக்கம்
எண்பத்து நான்கதின்மேல் அதிகம்வளி யொடுவான்
விண்ணளவு மூலமுயிர் மாமாயை குடிலை
விந்தளவு சொலமுடியா திந்தவகை எல்லாம்
அண்ணல்அடிச் சிறுநகத்தில் சிற்றகத்தாம் என்றால்
அவர்பெருமை எவர்உரைப்பார் அறியாய்நீ தோழி.
உரை: தோழி! மண்ணணு எண்ணிறந்த கோடி அளவு உடையது; நீராகிய பூத வணு அதைவிட நூற்றொரு கோடிக்கு மேல் அதிகமாகும்; நெருப்பாகிய பூத வணு எண்ணப்படுகின்ற ஆயிரம் பதினாயிரம் கோடிக்கு மேல் எண்பத்தி நான்காயிரம் அதிகமாகும்; காற்று ஆகாசம் கூடிய விண்ணுலகின் அளவும் உயிர் மூலம் சுத்த மாயை நாதம் விந்து ஆகிய இவற்றின் அளவும் அளந்து சொல்ல முடியாது; இந்த வகையெல்லாம் சிவபெருமானுடைய பாதத்தில் சிறு நகத்தின் ஓர் அணுவினுள் அடங்குவதாம் என்றால் அப்பெருமான் உடைய பெருமையை யார் அறிந்துரைக்க வல்லார். எ.று.
இங்கே மண் என்றது நிலமாகிய பூதத்தின் அணு என்று அறிக. “மண் திணிந்த நிலமும்” (புறம்) எனச் சான்றோர் கூறுவது காண்க. நூற்றொரு கோடி என்றும் ஆயிரம் அயுதம் முதலாகச் சொல்லப்படும் அளவுகள் வள்ளற் பெருமான் தமது யோக காட்சியால் அறிந்துரைப்பனவாகும். இவற்றை விளக்குதற்குரியவாய் வள்ளலார் கண்ட நூல்கள் கிடைத்தில. வளி - காற்று மண்டிலம். விண் - காற்றும் வானும் அடங்கிய பூதம். மாமாயை - சுத்த மாயை. குடிலை ஈண்டு நாத தத்துவத்தின் மேல் நின்றது. (22)
|