5647. மண்ணாதி ஐம்பூத வகைஇரண்டின் ஒன்று
வடிவுவண்ணம் இயற்கைஒரு வாலணுச்சத் தியலாய்க்
கண்ணென்னும் உணர்ச்சிசொலாக் காட்சியவாய் நிற்பக்
கருதும்அவைக் குட்புறங்கீழ் மேற்பக்கம் நடுவில்
நண்ணிஒரு மூன்றைந்து நாலொடுமூன் றெட்டாய்
நவமாகி மூலத்தின் நவின்றசக்திக் கெல்லாம்
அண்ணுறும்ஓர் ஆதார சத்திகொடுத் தாடும்
அடிப்பெருமை யார்அறிவார் அவர்அறிவார் தோழி.
உரை: தோழி! மண் முதலிய ஐந்து பூதங்களின் வகை இரண்டினுள் ஒன்று வடிவு வகை ஒன்று வண்ண வகை; இவற்றின் இயல்பு ஒரு சிறு அணுச் சத்தியின் இயல்புடையதாய்க் கண்ணுணர்வால் உணரலாகாத காட்சி உடையவாய் விளங்க அவற்றுள் அகம் புறம் கீழ் மேல் பக்கம் நடு என்ற கூறுகளைப் பொருந்தி ஒவ்வொன்றிலும் மூன்று ஐந்து நான்கு மூன்று எட்டு ஒன்பது என்று சொல்லப்படுகின்ற மூலச் சத்திகளுக்கெல்லாம் அமைந்த ஆதார சத்தியைக் கொடுத்து நடம் புரிகின்ற சிவனுடைய பெருமையை யாரே அறிவார்கள். எ.று.
மண் முதலிய பூதங்களின் வடிவு வகை வண்ண வகை இரண்டும் நுண்ணிய அணுச் சத்திகளின் இயற்கை இயல்புகளைக் கொண்டு இயலுகின்றனவாயினும் அவை கண் உணர்வுக்கு எட்டாது என்பது புலப்பட, “கண் என்னும் உணர்ச்சி சொலாக் காட்சியவாய் நிற்ப” என்று கூறுகின்றாள். கண் உணர்வுக்கு அகப்பட்ட வழி வாக்கால் சொல்ல வல்லதாம் என்பது பற்றி, “சொலாக் காட்சியவாய்” என்று சொல்லுகின்றாள். அகத்தே மூன்று சத்திகளையும் புறத்தே ஐந்து சத்திகளையும் கீழே நான்கு சத்திகளையும் மேலே மூன்று சத்திகளையும் பக்கத்தில் எட்டு சத்திகளையும் நடுவில் மூன்று சத்திகளையும் கொண்டிருப்பது விளங்க, “உள்புறம் கீழ் மேல் பக்கம் நடுவில் நண்ணி ஒரு மூன்று ஐந்து நாலொடு மூன்று எட்டாய் நவமாகி” என்று கூறுகின்றாள். இச் சத்திகள் காரணமாகத் தான் மண்ணாதி பூதங்களின் வகைகள் உள்புறம் முதலாகக் கூறுபடுகின்றன. இச் சத்திகள் பலவும் சிவசத்தியால் இயக்கப்படுவது பற்றி அச் சத்தியை, “ஆதார சத்தி” என்று அறிவிக்கின்றாள். (23)
|